கோயம்பேடு மார்க்கெட்டை மூடி இருந்தால் சென்னை, புறநகர் மக்களுக்கு காய்கறிகள் கிடைத்திருக்காது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை:  கோயம்பேடு மார்க்கெட்டை மூடியிருந்தால் சென்னை, புறநகர் மக்களுக்கு காய்கறிகள் கிடைத்திருக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அதிகளவில் வியாபாரிகள், பொதுமக்கள் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படும். அதனால் சென்னைக்கு வெளியில் ஏதாவது 3 இடங்களில் வியாபாரம் செய்தால் தொற்று ஏற்படாது என்று வியாபாரிகளிடம் மார்ச் மாதம் முதல் தொடர்ந்து பலமுறை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஆனால் வியாபாரிகள் மாற்று இடத்துக்கு செல்ல மறுத்து  விட்டனர். கோயம்பேடு தொற்று ஏற்பட்டவுடன் மே மாதம் 5ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது.

உடனடியாக 10ம் தேதி திருமழிசையில் மொத்த மார்க்கெட் தொடங்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் என்பது சென்னை மட்டும் அல்ல, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காய்கறி வழங்குவதில் முக்கிய பங்கு உண்டு. இங்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள் லாரிகளில் வருகிறது. அதனால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று மார்க்கெட்டை மூட முடியாது. அப்படி மூடினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும். வியாபாரிகளுக்கு நஷ்டம் வருவது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.அதை உணர்ந்து, யோசித்து எல்லோருடைய நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசு எடுத்த முடிவு. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் கோயம்பேடு மார்க்கெட் மாற்றி அமைக்கப்பட்டது.

5 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகளை அவர்கள் சப்ளை செய்ய மாட்டோம் என்று சொன்னால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு காய்கறியே கிடைக்காது. அதையெல்லாம் அரசு பார்க்க வேண்டும். இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும். உரிய நேரத்தில் அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>