×

வெளிநாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்பட 500 பேர் சென்னை வந்தனர்: 14 நாட்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்

சென்னை: ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிலிப்பைன்சில் சிக்கி தவித்த 100  மருத்துவ மாணவர்கள் உட்பட 500 இந்தியர்கள் 2 ஏர் இண்டியா தனி சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் ஊடரங்கால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஐரோப்பிய நாடுகளில் சிக்கித் தவித்த 333 இந்தியர்கள் ஏர் இந்தியா சிறப்பு தனி விமானத்தில் நேற்று காலை 8 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தனர். இவர்களில் 170 ஆண்கள், 145 பெண்கள், 10 சிறுவர்கள் 8 குழந்தைகள் அடங்குவர். இவர்கள் அனைவரையும் சென்னை விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அவர்கள் சமூக இடைவெளியில் வரிசைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை, குடியுரிமை சோதனைகள் நடந்தன. அனைத்தும் நடந்து முடிந்த பின்பு தனித்தனி பஸ்களில் ஏற்றி 14 நாட்கள் தனிமைப்படுத்தும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்லூரியில் இலவசமாக தங்கும் இடத்துக்கு 20 பேரும், மற்ற 313 பேரும் கட்டணம் செலுத்தும் சென்னை அண்ணா சாலை, தி.நகர், கிண்டியில் உள்ள தனியார் சொகுசு ஓட்டல்களுக்கும் அழைத்து செல்லப்பட்டனர். வழக்கமாக இலவச தங்கும் இடத்துக்கு கூட்டம் அதிகம் இருக்கும். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்களில் அதிகம் பேர் கட்டணம் செலுத்தி தங்கும் இடத்திற்கு செல்லவே ஆர்வம் காட்டினர்.

இதேபோல், பிலிப்பைன்ஸ் நாட்டில் தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தனர். ஊரடங்கு காரணமாக அந்த மருத்துவக் கல்லூரி மூடப்பட்டது. விமான சேவை இல்லாமல் அனைவரும் பிலிப்பைன்ஸ் நாட்டிலேயே தவித்தனர். இவர்களை மீட்டு சிறப்பு விமானத்தில் தமிழகத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று அவர்களின் பெற்றோர் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.  அதன்பேரில், மணிலாவில் இருந்து ஏர் இண்டியா சிறப்பு விமானம் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னை வந்தது.

அதில் நூற்றுக்கும் மேற்பட மருத்துவ மாணவர்கள் உட்பட 167 இந்தியர்கள் வந்தனர். இவர்கள் அனைவருக்கும்  மருத்துவ பரிசோதனை உட்பட அனைத்து சோதனைகளும் முடிந்து நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் வெளியில் அழைத்து வந்தனர். அவர்கள் தனி பஸ்கள் மூலம் தனிமைப்படுத்தப்படும் இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களில் இலவச தங்கும் இடமான மேலக்கோட்டையூருக்கு 49 பேர் சென்றனர். மீதம் உள்ள 118 பேர் கட்டணம் செலுத்தும் சொகுசு ஓட்டல்களுக்கு சென்றனர்.  அடுத்தடுத்து வந்த 2 விமானங்களில் 500 இந்தியர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamils ,Chennai ,Tamil , Tamil students, Chennai, 14 days of solitude, corona, curfew
× RELATED தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது...