×

சீனாவின் வுகான் போல மாறிப்போன தமிழக தலைநகர் சென்னையில் இருந்து வந்தால் கிராமங்களுக்குள் நுழைய தடை

* கொரோனாவால் சிக்கலில் தவிக்கும் சிட்டி மக்கள்

சென்னை: சென்னையில் இருந்து இ-பாஸ் பெற்று சொந்த ஊருக்கு செல்லும் மக்களை அவர்களின் சொந்த கிராமங்களுக்குள் நுழைய தடை விதித்து வருவது சென்னை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு ஓரளவு நன்றாக செயல்படுத்தப்பட்டது. அதனால்தான் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.  இப்போது ஊரடங்கும் அங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மக்களும் கட்டுப்பாடும் இல்லாமல் நடமாடத் தொடங்கி விட்டனர். ஆனால், தலைநகர் சென்னையின் நிலைமையோ தலைகீழாகிவிட்டது. எந்த தெருவுக்குள் திரும்பினாலும்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகத்தான் இருக்கிறது.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 9,674 பேர் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,637.  சென்னையை பொறுத்தவரை தென்மாவட்ட கிராமங்களில் உள்ள மக்களே கணிசமான அளவு வசித்து வருகின்றனர். மிகவும் பரபரப்பாக இயங்கி வந்த அவர்களது வாழ்க்கை கடந்த 50க்கும்  மேலான நாட்கள் முடங்கி கிடக்கிறது.  சென்னையில் அதிகரித்து வரும் நோய் தாக்கம் அவர்களை அச்சத்தின் பிடிக்கு கொண்டு சென்றுள்ளது. குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் சொந்த ஊர்களுக்கு எப்படியாவது சென்றுவிட முடிவு செய்தனர். தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது.

ஆரம்பத்தில் பாஸ் வாங்குவது என்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. இப்போது இ-பாஸ் ஏதாவது ஒரு காரணத்தை  கூறி  எளிதாக வாங்கி விடுகின்றனர். அதற்கு காரணம், சென்னையில் உள்ள மக்களை அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப தமிழக அரசு எடுத்த முடிவுதான் என்று கூறப்படுகிறது. நோய் தொற்று அதிகரித் து சென்னையில் உள்ளஅரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இதனால் நெருக்கடியில் வசித்து வரும் மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பினால் நோய் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும், அப்படியே பாதிக்கப்பட்டவர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கவனித்துக்கொள்ளும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இதை செயல்படுத்தி வருகிறது.

இதனால் தென்மாவட்ட மக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால், ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தும் வகையில் அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுகின்றனர். அவர்களை தினமும் சுகாதாரத்துறையினரும், காவல் துறையினரும் கண்காணித்து வருகின்றனர். மாவட்டங்களில் இந்த விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. பலர் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் வந்த தகவல் எப்படியாவது காவல் துறையினருக்கு சென்றுவிடுகிறது. அந்த ஊரை சேர்ந்தவர்களே தகவல் அளித்து விடுகின்றனர். இதனால் உடனடியாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

 சென்னையில் நோய் பயத்துடன் வாழ்வதை விட சொந்த ஊர்களில் எந்தவித அச்சமும் இல்லாமல் தனிமையாக இருப்பது பெரிய விஷயம் அல்ல என்கிறார்கள். அப்படி ஒரு பகுதியினர் சென்று விட்டனர். ஆனால், இப்போது அப்படி செல்பவர்களுக்கும் பெரிய பிரச்னை காத்திருக்கிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருவதால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் பல கிராமங்களில் உள்ளே வர யாருக்கும் அனுமதி இல்லை என தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இப்போது உரிய பாஸ் பெற்று தங்கள் சொந்த ஊருக்கு சென்றாலும். அதுவும் குறிப்பாக சென்னையில் இருந்து வருபவர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து வந்தவர்கள் யாராக இருந்தாலும் உள்ளே வர தடை விதித்துள்ளனர்.

 இதனால் அந்தந்த குடும்பத்தினர் தங்கள் உறவினர்களை வர வேண்டாம் என்றே வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. பல கிராமங்களில் ஒட்டுமொத்த பொதுமக்கள் எடுத்த முடிவு என கூறி அனுமதி மறுப்பதால் உறவினர்களுக்குள் மன சங்கடங்களும் ஏற்பட்டு வருகிறது.  இதுபோன்ற பிரச்னைகளால் சொந்த ஊருக்கு திரும்பும் சென்னை மக்கள் பல்வேறு சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அருகில் உள்ள சிறிய நகர் பகுதிகளில் இரவோடு இரவாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சம்  அடையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

எங்க நிலைமை இப்படி ஆயிடுச்சே...
சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள் கூறுகையில், ‘சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதால் உயிரை பாதுகாத்துக்கொள்ள சொந்த ஊருக்கு செல்கிறோம். அதுவே பெரிய போராட்டம். இப்போது பல கிராமங்களில் சென்னையில் இருந்து வருபவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர். முடிவு எடுத்தவர்களும் உறவினர்கள்தான், நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். எங்க நிலைமை இப்படி ஆயிடுச்சு. ஆனால் சொந்த ஊருக்கு என்று வந்துவிட்ட எங்களை போன்றவர்கள் எங்கு போய் தங்குவார்கள். அதையும் எண்ணி பார்க்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம்  எங்களுக்கு பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தி அனுப்பினால், எங்கள் கிராமங்களுக்கு செல்ல எந்த பிரச்னையும் வராது’ என கூறினார்கள்.



Tags : capital city ,Tamil Nadu ,Wukan ,China ,Chennai ,villages , China, Wukan, Tamil Nadu Capital, Chennai, Corona, Curfew
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...