×

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களால் ஆரம்பிச்சுடுச்சு ஆட்டம்: பல மாநிலங்களில் தொற்று அதிகரிப்பு

புதுடெல்லி: சொந்த ஊர் திரும்பும் வெளி மாநில தொழிலாளர்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.  இதனால், வெளி மாநில தொழிலாளர்கள் கொரோனாவின் புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகின்றனர். இந்தியாவில் முதலில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா வைரஸ் பரவியது. பின்னர், டெல்லி, மகாராஷ்டிராவின் நான்டெட் உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளால் வேகமெடுத்தது. அதைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட், கொரோனா குடியிருப்பாக மாறியது. இங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, தென் மாநிலங்களிலும் பரவியது.

மக்கள் ஒரே இடத்தில் கூடும் நிகழ்வுகளால், அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இந்நிலையில், தற்போது கொரோனாவின் புதிய ஹாட்ஸ்பாட்டாக வெளி மாநில தொழிலாளர்கள் மாறி இருக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வந்த இவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பம், குடும்பமாக படையெடுத்து வருகின்றனர். சிறப்பு ரயில்கள், லாரிகள், வேன்கள் என கிடைக்கும் எல்லா வாகனத்திலும், பைக், சைக்கிளிலும், எதுவும் கிடைக்காத பட்சத்தில் நடை பயணமாகவும் செல்கின்றனர்.

சமூக இடைவெளி, முகக்கவசம் இன்றி ஒரே இடத்தில் கும்பல், கும்பலாக கூடும் இவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றுடன் சொந்த ஊர்களுக்கு செல்வது தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. இவர்களின் மூலம் கொரோனா தனது புதிய வெறியாட்டத்தை தொடங்கி இருக்கிறது.
சொந்த ஊர் சென்றவர்களுக்கு பல மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

ஒடிசாவில் 73ல் 71 பேருக்கு பாதிப்பு
* ஒடிசாவில் நேற்று முன்தினம் பிற மாநிலத்தில் இருந்து வந்த 73 பேரை பரிசோதித்ததில் 71 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 50 பேர் குஜராத்தின் சூரத்தில் இருந்து வந்தவர்கள்.
* இம்மாநிலத்தில் கடந்த 3ம் தேதி 162 பேருக்கு மட்டுமே கொரோனா இருந்தது. வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் இப்போது 611 ஆகிவிட்டது.
* இங்குள்ள கஞ்சம் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி வரை ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.  தற்போது 137 பேர் பாதித்துள்ளனர்.

பீகாரில் 75% பேருக்கு அறிகுறி
பீகாரில் வெளி மாநிலத்திலிருந்து வந்த 75 சதவீத தொழிலாளர்கள் வைரஸ் அறிகுறியுடன் வந்திருப்பதாக மாநில சுகாதார செயலாளர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அவர்களுக்கு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் பயங்கரம் இனிதான் தெரியவரும்.

ரயிலில் மட்டும் 11 லட்சம் பேர்
வெளி மாநில தொழிலாளர்களுக்காக மத்திய அரசு கடந்த 1ம் தேதி முதல் ‘ஷ்ராமிக்’ சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதுவரை இயக்கப்பட்ட 932  ரயில்கள் மூலம், 11 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதுவரை அதிகபட்சமாக உபி.க்கு 487, பீகாருக்கு 254 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தற்போது, தினமும் 100 ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உபி.யிலும் தகிடுதத்தம்
உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வெளி மாநில தொழிலாளர்களால் நோய் தொற்று பெருகி வருகிறது. இது வைரசை கட்டுப்படுத்துவதில் புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக பல மாநில அரசுகள் கூறி வருகின்றன.

துயரத்திலும் ஒரு நல்லது
சோகத்திலும் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியதும் உடனடியாக பரிசோதிக்கப்படுகின்றனர். வைரஸ் தொற்று இருப்பவர்கள் பொது மக்களுடன் கலப்பதற்கு முன்பாகவே தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதே ேநரம், எத்தனை தொழிலாளர்கள் திரும்பி வந்துள்ளனர் என சரியாக மதிப்பிட முடியாத நிலையில் அரசுகள் உள்ளன.

உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு
சொந்த ஊருக்கு நடை பயணமாக சென்றபோது அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்த உறங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் 16 பேர் ரயில் மோதி இறந்தனர். இதையடுத்து, ‘சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு தங்குமிடம், உணவு கொடுத்து, இலவசமாக பஸ்சில் ஏற்றி அனுப்பும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும், சாலை மார்க்க தொழிலாளர்கள் செல்வதை தடுக்க, நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்,’ எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை நேற்று விசாரித்த நீதிபதி நாகேஷ்வர ராவ் அமர்வு, ‘தொழிலாளர்கள் ஊர் திரும்ப அரசு ரயில் வசதி செய்து தருகிறது. ஆனால், அதற்கு காத்திராமல் அவர்கள் சாலை வழியாக நடந்து சென்றால் எப்படி தடுக்க முடியும். யார் நடந்து செல்கிறார்கள், ரயிலில் செல்கிறார்கள் என்பதை நீதிமன்றம் எப்படி கண்காணிக்க முடியும்,’ என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.



Tags : homeowners ,states ,epidemic , Hometown, Workers, States, Corona, Curfew
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்