×

கொரோனாவை விரட்ட விதவிதமான கண்டுபிடிப்பு: பட்டைய கிளப்பும் பள்ளி மாணவர்கள்: வருங்கால இந்தியாவின் சொத்துகள்

புதுடெல்லி: கொரோனா வைரசிடம் இருந்து நம்மையும், மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக சன்கிளாசஸ் முதல் ஆட்டோமெடிக் டோர் பெல் வரை அற்புதமான கண்டுபிடிப்புகளை பள்ளி மாணவர்கள் உருவாக்கி அசத்துகின்றனர். கொரோனாவிடம் இருந்து மக்களை பாதுகாக்க விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிறுவனங்களும் மட்டுமல்ல, நமது பள்ளி மாணவர்களும் அசத்தலான கண்டுபிடிப்புகளை உருவாக்கி பெருமை சேர்க்கின்றனர். கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாணவர்கள் தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தி மனித இனத்திற்கு பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

தொடாமல் ஒலிக்கும்  காலிங்பெல்
டெல்லி சாலிமர் பாக் மாடர்ன் பப்ளிக் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் சர்தக் ஜெயின், ‘அர்டியூனோ’ என்ற தானியங்கி டோர்பெல் (காலிங் பெல்) உருவாக்கி உள்ளார். தொடுதலின் மூலமாக கொரோனா பல இடங்களில் பரவ வாய்ப்புள்ள நிலையில், இந்த டோர்பெல்லை, நம் வீட்டுக்கு வருபவர்கள் அழுத்த வேண்டிய அவசியமில்லை. 30 முதல் 50 செமீ தூர இடைவெளியில் கதவருகில் யாராவது வந்தால், டோர்பெல்லில் உள்ள சென்சார் கண்டறிந்து, தானாகவே பஸ்சரை அழுத்தி ஒலியை எழுப்பும்.

வைரசை அழிக்கும் ரிஸ்ட் பேண்ட்
டெல்லி அமிதி இன்டர்நேஷனல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவம் முகர்ஜி, ‘அபே’ என்ற சானிடைசேஷன் ரிஸ்ட் பேண்ட் கண்டுபிடித்துள்ளார். இதில் புறஊதா கதிர்களும், சென்சாரும் உள்ளது. இந்த பேண்ட்டை நம் கையில் அணிந்து கொண்டு, எதேனும் பொருளை தொட நெருங்கினாலே, சென்சார் மூலமாக பேண்ட் கண்டறிந்து, உடனடியாக அந்த பொருளின் மீது புற ஊதா கதிர்களை செலுத்தி, அங்கு வைரஸ்கள் இருந்தால் அழித்து விடும். மேலும், சானிடைசரும் அப்பொருளின் மீது தெளிக்கப்படும். சானிடைசர் தீர்ந்தால் தகவலையும் தெரிவிக்கும். இது ஆப் மூலமாக இயங்கக் கூடியது.

விலகிச் செல்ல  எச்சரிக்கும் கண்ணாடி
அரியானாவை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் கார்த்திக் தாரா, 4ம் வகுப்பு படிக்கும் விநாயக் தாரா சகோதரர்கள் இணைந்து மரத்தினாலான சிறிய ரக வென்டிலேட்டர் கருவி மற்றும் சென்சார் சன்கிளாசஸ் ஆகியவற்றை உருவாக்கி உள்ளனர். இந்த சன்கிளாசஸ் அணிந்தவரின் அருகில், யாராவது ஒரு மீட்டர் இடைவெளி இன்றி அருகில் வந்தால், ‘விலகி இருங்கள், சமூக இடைவெளி பின்பற்றுங்கள்’ என குரல் ஒலிக்கும். பீப் சத்தம் மூலம் எச்சரிக்கையும் செய்யும்.
* இப்படி பலப்பல மாணவர்கள் தொடர்ந்து பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். இந்தியர்கள் மிகவும் அறிவாளிகள் என்பதால்தான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் நமது நாட்டு இளம் விஞ்ஞானிகளை பல லட்சம் சம்பளம் கொடுத்து கொத்திச் செல்கின்றன.
* ஹூம்.. அவர்களுக்கு நம் அருமை தெரிகிறது.

Tags : India , Corona, School Students, India, Curfew
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...