×

பாழாய் போகுது பொழப்பு ஊரடங்கால் ஓய்ந்த உணவகங்கள்: சமூக இடைவெளி’யால் ‘விலகிய’ வருமானம்

* டெலிவரி நிறுவனம், விவசாயிகளுக்கும் ஆபத்து
* உணவகங்களில் நடப்பு ஆண்டில் 50 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்படும்.
* உணவகங்களுடன் தொடர்புடைய பால் விற்பனை, தோட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
* இதன் தொடர்ச்சியாக, உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: ஊரடங்கு காரணமாக உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு நிதியாண்டில் மட்டும் உணவகங்களுக்கு 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என கிரிசில் தெரிவித்துள்ளது.கிரிசில் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:  கொரோனா ஊரடங்கால் ஓட்டல், உணவகங்கள் மூடப்பட்டன. பின்னர் சில தளர்வுகளுடன் ஓட்டல்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் சிறிய ஓட்டல்கள் சில திறக்கப்பட்டு பார்சல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரிய உணவகங்கள் பல திறக்கப்படவில்லை. பெரிய உணவகங்களில் நேரில் வந்து உணவு அருந்துவோர் மூலமாகத்தான் 75 சதவீத வருவாய் கிடைக்கிறது.

பார்சல், ஆன்லைன் டெலிவரி மூலம் கிடைக்கும் வருவாய் 25 சதவீதம்தான். எனவே, ஊரடங்கால் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
 ஆன்லைன் டெலிவரிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் ஆர்டர்கள் 70 சதவீதம் வரை சரிந்துவிட்டது. ஊரடங்கு முடிந்து திறந்தாலும், முதல் ஒன்றரை மாதங்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, வழக்கமான சேவைகளில் சுமார் 25 சதவீதம் முதல் 30 சதவீத சேவைகள் மட்டுமே வழங்க முடியும்.

 அதோடு, வாடிக்கையாளர்கள் உணவகங்களுக்கு நேரில் வர தயங்குவார்கள். உணவகங்கள் வழங்கும் சேவைகள் குறைந்துவிடுவதால் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதோடு, ரெஸ்டாரண்ட் வருவாய் குறைவதால், இதன் தொடர்ச்சியாக விவசாயிகள், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வோர், உணவு பதப்படுத்துதல், சரக்கு போக்குவரத்து, உணவு டெலிவரி ஆகிய தொழில்களும் பாதிக்கப்படும் என கிரிசில் தெரிவித்துள்ளது.

உணவு டெலிவரி நிறுவனங்களில் ஆட்கள் குறைப்பு
உணவகங்களில் ஆன்லைன் ஆர்டர்கள் குறைந்து வருகின்றன. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வெளியான தகவல்கள் மற்றும் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்தது போன்ற காரணங்களால், உணவு டெலிவரி நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் கமிஷன் கிடைக்காததால், முதல் கட்டமாக இந்த நிறுவனங்கள் உணவு ஆர்டருக்கான தள்ளுபடி சலுகைகளை குறைத்தன.

இந்நிலையில், பிரபல உணவு டெலிவரி நிறுவனம் 13 சதவீத பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. அவர்களுக்கு அடுத்த 6 மாதம் 50 சதவீத சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுபோல், உபர் நிறுவனம் 14 சதவீத ஊழியர்களை, அதாவது 3,700 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. ஜூம் வீடியோ கால் மூலம் ஊழியர்களை அழைத்து வேலை நீக்கம் பற்றி இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Tags : RESTAURANTS ,dissident , Food Delivery, Delivery Company, Farmers, Corona, Curfew
× RELATED மதுரையில் 17 நாளில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!!