×

ரன் குவிப்பது மட்டுமே என் வேலை…தவான் உற்சாகம்

புதுடெல்லி: எந்த போட்டியாக இருந்தாலும் ரன் குவிப்பது மட்டுமே என் வேலை, இந்திய அணியில் இடம் பெறுவது தேர்வுக் குழுவினரின் முடிவை பொறுத்தது என்று தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்தார். காயம் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், அணியில் ‘உள்ளே வெளியே’வந்து போய்க் கொண்டிருக்கிறார்.  ரோகித் ஷர்மா,  கே.எல்.ராகுல் இணைந்து கலக்கி வருவதால்  ஷிகர் தவானின் இடம் கேள்விக் குறியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதானுடன்  சமூக ஊடகமொன்றில் உரையாடிய  ஷிகர் தவான் கூறியதாவது: விளையாட்டில் காயம் அடைவது  சகஜமானது. எனது கவனமெல்லாம் அதிலிருந்து எப்படி மீள்வது என்பதுதான். நான் மீண்டு வந்திருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதே எனது  இலக்கு. அதற்காக என்னை ஆயத்தமாக்கி கொண்டிருக்கிறேன். உடல்தகுதியை மேம்படுத்திக் கொள்ள  கடுமையாக உழைக்கிறேன்.

வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ, அப்போது  விளையாடத் தயாராக இருக்க வேண்டும்.  அணிக்காக ரன் குவித்து  ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சிறந்த வீரனாக இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் நல்ல தொடக்கத்தை தர உழைக்கிறேன்.  அதுதான் எனது அணிக்கு நான் அளிக்கும் பங்களிப்பு.  கடைசியாக விளையாடிய போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு  அரைசதம் அடித்தேன். அதற்கு  முந்தைய போட்டிகளில் 30, 40 என்று ரன்கள் எடுத்திருந்தேன்.

எனது 100 சதவீத உழைப்பின் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம்  ரன் குவிப்பதே என் வேலை.  அதன் பிறகு என்னை அணியில் சேர்ப்பது என்பது  தேர்வுக்குழுவில்  உள்ள தேர்வாளர்களின் முடிவு. அணி தேர்வு என்பது என் கைகளில் இல்லை. பல வீரர்கள்  சிறப்பாக விளையாடுவது நமது அணிக்கு நல்ல விஷயமாகும்.  ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல்  மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள். அவர்களின் ஆட்டத்தை சக வீரனாக மறுமுனையில் இருந்து  ரசித்தேன். இவ்வாறு தவான் கூறியுள்ளார்.



Tags : Dhawan , Run, player Shikhar Dhawan.Corona, curfew
× RELATED இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது