மத்திய அரசை பிரதிநிதிகள் குறை கூறுவதால் எந்த பயனும் இல்லை: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. போர்க்கொடி :புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

புதுச்சேரி: மத்திய அரசை குறை கூறிக்கொண்டு இருப்பதால் எந்த பயனும் இல்லை என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., புதுச்சேரி அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா பாதிப்பாலும், தடுப்பு நடவடிக்கையாலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், முதியோருக்கு ஓய்வு  ஊதியமும் போட முடியாத நிலையில், எந்த ஒரு மக்கள் நலத்திட்டமும் செய்ய முடியவில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, அரசு எந்த ஒரு ஆலோசனையோ, அதைப்பற்றிய கவலையோ இந்த அமைச்சரவைக்கோ, துணை நிலை ஆளுனருக்கோ, தலைமை செயலர் உட்பட அரசு அதிகாரிகளுக்கோ இருப்பதாக தெரியவில்லை.

பொருளாதார மீட்பு நடவடிக்கை பற்றிய எந்த ஒரு ஆலோசனை கூட்டமோ அல்லது பொருளாதார நிபுணர்களை அழைத்து பேசியதாகவோ தகவல் ஏதும் இல்லை. எனவே பொருளாதார முன்னேற்றத்துக்கு, மத்திய அரசு நிதி தரவில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தால் மக்களுக்கு பயனில்லை. இனியாவது அரசு, நிதி வருவாயை பெருக்க கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள 500 மதுபான கடைகள் மூலம் வரும் ரூ.ஆயிரம் கோடி வருமானம் சுமார் 40 மதுபான மொத்த வியாபாரிகளுக்கும், ஆலை உரிமையாளர்களுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் போய் சேருகிறது. மதுபான கடைகளையும், மொத்த வியாபாரத்தையும், சில்லரை மதுபான கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் கிடைக்கும். மக்கள் நலன் கருதி இதன் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவர்னர் மாளிகையில் சிக்கனம்

புதுவை கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் நடப்பு ஆண்டு திட்டமிட்டப்பட்ட சம்பளம், ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி, ஏழைகளுக்கு இலவச அரிசி போன்ற அடிப்படையில் செலவுகள் இருக்க வேண்டும். குடியரசுத்தலைவர் மாளிகையை போல் ராஜ்நிவாஸும் அனைத்து செலவுகளிலும் கட்டுப்பாட்டை பின்பற்றும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>