×

அக்.-நவம்பரில் பீகாரில் சட்டப்பேரவைக்கு தேர்தல் கொரோனா கிடக்கட்டும்... தேர்தல் வேலையை பாருங்க..! காணொலியில் கட்சி நிர்வாகிகளுடன் நிதிஷ் ஆலோசனை

புதுடெல்லி: பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர்-நவம்பரில் தேர்தல் நடக்கவுள்ளதால், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் வேலையை பார்க்க காணொலி மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் நிதிஷ் குமார் ஆலோசனை வழங்கி வருகிறார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசில் முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். இம்மாநிலத்திற்கு வருகிற அக்டோபர், நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இன்றைய கொரோனா நெருக்கடியில்  வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடங்கி தேர்தல் பணிகளில் மொத்த அரசு இயந்திரமும் இயக்கப்பட வேண்டும்.

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை என ஒவ்வொரு நடைமுறையும் கூட்டம் திரள்கிற செயல்பாடுகளாகவே இருக்கின்றன. என்னதான் கொரோனா குறைந்தாலும்கூட, அடுத்த சில மாதங்களுக்கு கடைபிடிக்கப்பட வேண்டிய சமூக விலகலுக்கு மேற்படி நடைமுறைகள் எதிரானவையாக இருக்கும். இருந்தும், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், கொரோனா நிலைமைக்கு மத்தியில் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். இதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 2 வாரங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரம் நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசி வருகிறார்.

இதுவரை 1,250க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் கட்சியின் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிகளுடனும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களுடனும் பேசிவருகிறார். இதுகுறித்து கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் பிஹாரி சிங் கூறுகையில், “முதல்வர் நிதிஷ் குமார் முதலில் கட்சி உறுப்பினர்களிடமிருந்து எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்கிறார். அதேபோல் கொரோனா நிவாரணம் குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் பேசி வருகிறார். வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை மூன்று மூன்று மாவட்டமாக நடக்கிறது.

ஏழை மக்களின் நலனுக்கான அரசின் திட்டங்களை கட்சி உறுப்பினர்கள் மக்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளார்’ என்றார். இன்றைய சூழலில் வருகிற 2021 ஏப்ரல், மே மாதங்களில்  தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இருந்தும், பீகார் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளதால் கொரோனாவுக்கு மத்தியில் தேர்தல் பணியை முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Bihar ,party executives ,Nitish ,election ,Electoral Corona , Bihar, Legislative Assembly, Corona, Nitish Advice
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!