×

கோயம்பேடு மூலம் வந்த கொரோனா: கதிகலங்கி கிடக்கும் கிராமம்

தேனி: தேனி மாவட்டம் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் மீண்ட சில மணி நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை வரை 29ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரே கிராமத்தை சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 43 பேரில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். மீதம் உள்ள 42 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலை சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை.

மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களை தேடி கண்டுபிடித்து சோதனை செய்தனர். இதில் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கோயம்பேடு சென்று வந்துள்ளார். வந்தவர் கிராம மக்களுடன் அமர்ந்து தாயம் விளையாடி உள்ளார்.

இவருடன் தாயம் விளையாடிய 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் உள்ள இக்கிராமத்தை சேர்ந்தவர்களே மேலும் சிலர் பாதிப்பு இருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே சோதனைகள் தொடர்வதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தற்போது பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெறும் அத்தனை பேரும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொடர்புடையவர்கள் தான்.

தற்போதைய நிலையில் அனைவரின் உடல் நலமும் நல்ல முறையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்,‘‘ தற்போது தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் வீரியம் குறைந்தது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 22 கேன்சர் நோயாளிகள், 2 எய்ட்ஸ் நோயாளிகள், 15 டயாலஸிஸ் நோயாளிகள், இரண்டு கல்லீரல் நோயாளிகள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அந்த அளவு தமிழகத்தில் வைரஸ் வீரியம் குறைந்ததாக உள்ளது. நமது மருத்துவமுறையும் வலுவானதாக உள்ளது.

எனவே கொரோனா பாதித்தவர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. முறையாக சிகிச்சை பெற்றாலே குணமாகி விடலாம். இருப்பினும் தொற்று ஏற்படாமல் இருப்பது தான் மிகச்சிறந்த பாதுகாப்பு முறை,’’என்றனர்.

Tags : Corona ,Coimbatore ,village ,The Gleaming Village , Coimbatore, Corona, Village
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...