×

மாணவர்கள், பெற்றோர் தொடராத நிலையில் வழக்கறிஞர் மனுவை எப்படி ஏற்பது?: 10-ம் வகுப்பு தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்...!

சென்னை: கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால், மீண்டும் தேர்வுகள் நடப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் 19ம் தேதி தொடங்கிய நிலையில் அந்த பணியும் பாதியில் நின்றது. தற்போது பிளஸ் 2 விடைத்தாள்  திருத்தும் பணிகளையும் மே 27ம் தேதி தொடங்க அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.

தொடர்ந்து, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும்.  பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த தேர்வு  ஜூன் 2ம் தேதி நடத்தப்படும். அதேபோல 34 ஆயிரத்து 842 மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் 24ம் தேதியில் நடந்த தேர்வை எழுத முடியாமல் போனது. அதனால், அந்த மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதி  தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27ம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் , அச்சப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தேர்வை ஒத்திவைக்க  அரசுக்க கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, 2  உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடைவிதிக்க முடியாது என்றனர். மேலும், மனு தாரர் வாபஸ் பெற அனுமதி கோரியதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்தனர். இதன் மூலம் தமிழக அரசு அறிவித்தப்படி ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.


Tags : HC ,parents ,Advocate , How to accept Advocate's petition against students and parents?
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...