×

கறிகடைகளுக்கு விற்பதை தடுக்கிறது நாட்டு இன மாடுகளை காக்க தனி அமைப்பு: விவசாயிகளுக்கு மட்டும் விற்பனை

காங்கயம்: கறிக்கடைகளுக்கு விற்பதை தடுத்து நாட்டு இன  மாடுகளை காக்க காங்கயத்தில் ‘விற்பனை உதவி குழு அமைப்பு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து மற்ற விவசாயிகளுக்கு மட்டும் இதுவரை 115 மாடுகள்  விற்கப்பட்டுள்ளது.   திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை, ஞாயிறு தோறும் நடைபெற்று வந்தது. திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்ட விவசாயிகளும், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இடைத்தரகர் யாரும் இன்றி மாடுகளை நேரடியாக விலைபேசி வாங்கலாம். இதனால் நாட்டு மாடுகள் இனம் காக்கப்பட்டு, எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.  இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் மாட்டு சந்தைகள் கூடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்ந சமயத்தில் கறிக்கடையில் கறி விலை ஒரு கிலோ ரூ.200லிருந்து ரூ.400 ஆக உயர்ந்தது. இதனால் கறிக்காக பல வியாபாரிகள் நாட்டு மாடுகளை அதிக விலை கொடுத்து வாங்க தொடங்கினார்கள். இதனால் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையான கன்றுகள் ரூ.40 ஆயிரம் வரை விலை போனது. கிடாரி கன்றுகளை இதுவரை வெட்டுக்கு வாங்காமல் இருந்தனர். ஆனால் தற்போது அதையும் வியாபாரிகள் வாங்கி வருகின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் நாட்டு மாடுகள் எண்ணிக்கை மீண்டும் குறையும் நிலை உருவாகிவிடும். இதனால் நாட்டு மாடுகளை காக்கவும், விவசாயிகளுக்கு மாடுகளை விற்று தரவும் காங்கத்தில் உள்ள கோசாலை சார்பில் புதிய டோல் ப்ரீ சேவை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இது வரை 115 மாடுகள் வேளாண் பயன்பாட்டிற்காக மட்டும் விற்கப்பட்டுள்ளது. இது குறித்து பழையகோட்டை மாட்டுத்தாவணி பொறுப்பாளரும், கோசாலை நிர்வாகியுமான சிவக்குமார் கூறியதாவது: காங்கயம் உள்ளிட்ட நாட்டு இனமாடு விற்பனை உதவி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 பேர் தன்னார்வலர்கள் செயல்படுகிறன்றனர். இதற்காக ஒரு ‘செயலி’ உருவாக்கப்பட்டு டோல் ப்ரீ சேவை எண் 18001215662 தரப்பட்டுள்ளது. விவசாயிகள் மாடு விற்பவர், மாடு வாங்குபவர்கள் இந்த எண்ணை அழைத்தால் அவர்களுக்கு தேவையான உதவி செய்யப்படுகிறது.

இதனால் கேரளா மற்றும் உள்ளூரில் மாடுகளை கறிக்காக வெட்டுபவர்களிடம் இருந்து காங்கயம் இன மாடுகளை காக்க முடியும். தோட்டங்களுக்கே நேரிடையாக சென்று கன்றுமாடு, காளைகள், கிடாரிகள் என தேவைப்படுபவர்களுக்கு விலை பேசப்படுகிறது. சந்தை கூடாமல் இருப்பதால், இதுவரை கொங்கு மண்டலத்தில் 700 மாடுகள் வெட்டுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நாட்டு மாடுகள் அழிவுக்கு சென்றுவிடும். விவசாயிகளுக்கு உதவவும், காங்கயம் இன நாட்டு மாடுகளை காக்கவும் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயன் அடைவார்கள். இது வரை 115 மாடுகள் வேளாண் பயன்பாட்டிற்காக மட்டும் விற்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் தேவைப்படுவோர் 18001215662 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Prohibits , sale , livestock
× RELATED சேலம் தலைவாசலில் அமைக்கப்படும்...