×

ஊரடங்கால் பாதிப்பு: சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி வடமாநிலத்தவர்கள் போராட்டம்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், அதிவேக ஈணுலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. இந்த அணுமின் நிலைய வளாகத்தில் நடக்கிற கட்டிடப் பணிகள் உள்ளிட்ட  ஒப்பந்தப் பணிகளில் உள்ளூர் ஒப்பந்தப் பணியாளர்கள் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்தும்  ஒப்பந்த பணியாளர்கள் வந்து பணிபுரிகின்றனர்.  வட மாநில ஒப்பந்தப் பணியாளர்கள் அணுமின் நிலையத்திற்கு வெளியே ஷெட் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் வட மாநிலத்தவர்கள் கடந்த 2 மாதங்களாக அந்த ஷெட்களிலேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் தங்களை  சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க  ஒப்பந்ததாரர்களிடம் கடந்த 10 நாட்களாக  அவர்கள் கேட்டும் எவ்வித முன்னேற்பாடும் செய்யாததால் 350க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று  அதிகாலை சுமார் 2 மணியளவில் புறப்பட்டனர். தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

உடனே வடமாநிலத்தவர்கள் இசிஆர் சாலையில் மறியல் செய்தனர். பின்னர்  போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் இரு தினங்களில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் வடமாநிலத்தவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags : Northerners , Curfew, Hometown, Northern Territories, Corona, Curfew, Struggle
× RELATED சென்னை விமான நிலையம்,...