×

ஏடி எம்மில் பணம் எடுக்கும் முதியவரிடம் பணம் பறித்தவர் சிக்கினார்

பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம், ஜெய்கார்டன் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்(65).  சில நாட்களுக்கு முன்பு வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். இவருக்கு பார்வை சற்று மங்கலாக இருந்ததால் பணம் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.  அப்போது ஹெல்மெட் அணிந்து  பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் பிரபாகரனின் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுத்துக் கொடுக்க உதவி செய்வது போல் பாவனை செய்தார். அப்போது ஏடிஎம்மில் பணம் இல்லை என்று அவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டார். பிரபாகரன் ஏடிஎம் கார்டை வாங்கி கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது செல்போனுக்கு 50 ஆயிரம் பணம் எடுத்தது போல் எஸ்.எம்.எஸ் வந்தது . அப்போது தன்னிடம் இருந்த ஏடிஎம் கார்டை பார்த்த போது  அது தன்னுடைய ஏடிஎம் கார்டு இல்லை என்பது தெரியவந்தது.  இதுகுறித்து அவர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டும், பைக் நம்பரை வைத்தும் மர்ம நபரை தேடி வந்தனர். இதில் வளசரவாக்கம், எஸ்.வி.எஸ் நகரை சேர்ந்த பார்த்தசாரதி(50), என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சொந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாமல் நின்று கொண்டிருக்கும் வயதானவர்களை குறிவைத்து பணம் எடுத்துக் கொடுப்பது போல் நடித்து அவர்களிடம் போலியான ஏ டிஎம் கார்டை கொடுத்து பின்னர் அந்த ரகசிய நம்பரை வைத்து பணம் எடுத்து வந்ததை ஒப்புக் கொண்டார்.  

மேலும் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க ஹெல்மெட்டுடன் சென்று வந்தது தெரியவந்தது. இவரிடமிருந்து 25 ஆயிரம் பணம் மற்றும் ஒரு பைக், ஏராளமான ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.  



Tags : ATM , Chennai Development, Jaikartan, ATM, Elderly, Money Laundering
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...