×

திமுக எம்பிக்களுக்கு அவமரியாதை தலைமைச் செயலாளரின் செயல் பண்பாடற்றது: வைகோ கண்டனம்

சென்னை: திமுக எம்பிக்களிடம் குறைந்தபட்ச மரியாதையைக்கூட காட்டாமல், மிகுந்த ஆணவத்துடன் நடந்துகொண்ட தலைமைச் செயலாளர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு உதவிகளை நாடி அழைப்பு விடுத்துள்ளனர். திமுக சார்பில் கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டிய பிரச்னைகள் குறித்து வந்துள்ள ஒரு லட்சம் கோரிக்கைகளை தமிழக அரசிடம் நேரில் முன் வைப்பதற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர்  டி.ஆர்.பாலு  தலைமையில் மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், வடசென்னை எம்பி கலாநிதி, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு தலைமைச் செயலகம் சென்றுள்ளது.

தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர்  சண்முகத்தை  சந்தித்து, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஒப்படைக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இதுதான் நிலை எனில், எளிய மக்களிடம் அதிகார வர்க்கம் எப்படி நடந்துகொள்ளும்? இதுபோன்ற பண்பாடற்ற, நெறிகெட்ட மரபு மீறிய செயல்களை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகளிடம் குறைந்தபட்ச மரியாதையைக்கூட காட்டாமல், மிகுந்த ஆணவத்துடன் நடந்துகொண்ட தலைமைச் செயலாளர் உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  
 தலைமைச் செயலாளர் சண்முகம், அவர் வகிக்கும் பொறுப்புக்கு தக்கபடி நடந்து கொள்ளாமல், தன்னை சந்திக்க வந்த திமுக எம்.பி.க்களிடம் தனது தாழ்ந்த தரத்தை வெளிப்படுத்தியுள்ளார். ‘கொரோனா நோய் தொற்று என்பது மக்கள் தொடர்புடைய பிரச்னை. அதை அரசு பார்த்துக் கொள்ளும். அதுபற்றி கவலை வேண்டாம்’ என்று  ஏளனப்படுத்தியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டிய கடமை தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மறுத்து, அநாகரிகமாக  நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.



Tags : MPs ,Vaiko ,Chief Secretary ,DMK , DMK MPs, Chief Secretary, Vaiko
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...