×

கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும்: வணிகர் சங்கம் கோரிக்கை

சென்னை: கோயம்பேடு காய்கறி, மளிகை, பூ, பழம், வணிக வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு துரிதமாக மீண்டும் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, அரசின் அறிவுறுத்தலை ஏற்று கோயம்பேடு மளிகை கடை பூ, பழம் வணிக வளாகத்தை கடந்த ஏப்ரல் 25ம் தேதி, காய்கறி மொத்த வளாகத்தை 5ம் தேதி வரை  முழுமையாக அடைத்து கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட ஒத்துழைப்பு அளித்துள்ளது.
     
பேரிடர் தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை பெருநகர வளர்ச்சி தனி அலுவலர் கார்த்திகேயன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்களினால் வணிக வளாகம் தற்காலிகமாக மாதவரம், திருமழிசை பகுதிகளுக்கு வணிகர்கள் ஒத்துழைப்போடு மாற்றி அமைக்கப்பட்டது. கொரோனா மட்டுமின்றி இதர மலேரியா, டைபாய்டு, சிக்கன்குனியா நோய்கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்க உரிய சுகாதாரப்பணிகளையும், தூய்மைப்படுத்தும் திட்டத்தினையும், கிருமிநாசினி தெளிப்பு, இதர பராமரிப்புகளை துரிதமாக மேற்கொண்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோயம்பேடு வணிகவளாகத்தை திறக்க வேண்டும்.  

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாராம் இழந்துள்ள வணிகர்கள் மீண்டும் தங்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும் தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவேண்டும் என்பதினால் தொழிலாளர்கள் வருவதற்கான போக்குவரத்து அனுமதி சீட்டு போன்றவற்றை எளிமைப்படுத்தி அறிவிப்புகள் வெளியிடவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Koyambedu market, Merchant Association
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...