×

சென்னை குடிசை பகுதிகளில் உள்ள 26 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை: சென்னை குடிசை பகுதிகளில் உள்ள 26 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 650 குடிசை பகுதிகளில் சுமார் 26 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதி மக்களுக்கு ஒருவருக்கு இரண்டு முகக்கவசம் என மறுபயன்பாட்டுடன் கூடிய துணியால் ஆன சுமார் 50 லட்சம் முகக்கவசங்கள் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், குடிநீர் பணிகள், 100 நாள் வேலைவாய்ப்பு பணி துவங்க வேண்டும்.

கிராம அளவில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை 19,792 சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் 8,45 லட்சம்  குடும்பங்களுக்கு விநியோகம் செய்து உள்ளனர்.  கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஊரகப் பகுதியில் உள்ள பயிற்சி பெற்ற 540 இளைஞர்கள், அரசு மருத்துவமனைகளில் நல்வாழ்வு பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களை கொண்டு 6 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Tags : SB Velumani ,SP Velumani ,huts ,Chennai , Chennai Cottage Areas, Facial Security, Minister
× RELATED தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது