×

கொரோனா ஊரடங்கால் தொழிலில் நஷ்டம்: அச்சக அதிபர் விஷமருந்தி கத்தியால் குத்தி தற்கொலை: மதுரையில் சோகம்

மதுரை:  மதுரை, மோதிலால் மெயின் ரோடு, யோகானந்த சாமி வடக்கு மடம் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன்(51). மனைவி, 2 குழந்தைகள்  உள்ளனர். பொன்மேனி பகுதியில் அச்சகம் நடத்தி வந்தார். கொரோனா தடுப்பு ஊரடங்கால், கடந்த 50 நாட்களாக அச்சகம் மூடப்பட்டுள்ளது. இதனால்  தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. மன வேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து, ‘‘அச்சகத்திற்கு சென்று வருகிறேன்’’ என மனைவிடம் கூறி விட்டு சென்றார். பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. செல்போனில் அழைத்தும் எடுக்கவில்லை. இதனால்  சந்தேகமடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அச்சகத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கத்திக்குத்து காயங்களுடன்  இளங்கோவன் இறந்து கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தந்த தகவலின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘‘இளங்கோவனின்  அச்சக அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தோம். இதில், முதலில் வந்தவுடன் விஷ மருந்தை குடித்து விட்டு,  கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை பார்த்தபோது, அதில், ‘கடந்த 50 நாட்களாக அச்சகம் மூடப்பட்டதால் தொழில் முடங்கியுள்ளது. இதனால்  வெளியில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் குடும்பத்திலும், வெளியிலும் பிரச்னையாக உள்ளது. இந்த  மனவேதனையில் தான் விஷத்தை குடித்து விட்டு, என்னை நானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும்  காரணம் இல்லை’ என 8 பக்க அளவிற்கு எழுதி வைத்துள்ளார்’’ என்றனர்.


Tags : Loss ,Corona ,Press ,death ,tycoon ,poison Coroner ,Curfew Loss ,Madurai , Corona, curfew, loss of business, tycoon, suicide, Madurai
× RELATED கொரோனா ஊரடங்கால் தொடர்ந்து முடக்கம்:...