சிறப்பு ரயிலில் செல்லும் வெளிமாநிலத்தினருக்கு ‘செக்’ ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது: முகவரியை சேகரிக்கிறது ஐஆர்சிடிசி

புதுடெல்லி: சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் சென்ற பிறகு வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால்,  அவர்களை பிடிப்பதற்கு வசதியாக, அவர்களின் சேருமிட முகவரியை ரயில்வே சேகரிக்கிறது. கொரோனா ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில்  சிக்கித் தவித்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்வதற்காக மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகின்றன. இதன் மூலம்,  பல லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த ரயில்களில் பயணம் செய்த 12 பேருக்கு அவர்கள் ரயிலில் இருந்து  இறங்கி பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால், பரிசோதனை முடிவு தெரியவதற்குள் அவர்கள் ஊருக்கு சென்று விட்டனர். இதனால், அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் உஷார் அடைந்துள்ளது. சிறப்பு ரயிலில் பயணம் செய்பவர்கள், டிக்கென் முன்பதிவின் போது தாங்கள்  சேருமிடத்தின் முகவரியை ஆதாரத்துடன் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கி இருக்கிறது. இது தொடர்பாக ரயில்வே  செய்தி தொடர்பாளர் ஆர்டி பாஜ்பாய் கூறுகையில், `‘ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்படும் பயணிகள், சேருமிட முகவரி குறிப்பிடுவது  கடந்த 13ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த விவரம் ஐஆர்சிடிசி இணையத்தில் பதிவு செய்யப்படும். பயணிகள் சென்ற பிறகு  அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தால்  அவர்களை பிடித்து சிகிச்சை அளிக்க இந்த நடைமுறை அவசியமாகிறது,’ என்றார்.

ஒரே வாரத்தில் 45 கோடி

ரயில்வே கடந்த 12ம் தேதி முதல் வெளிமாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளர்களுக்காக டெல்லியில் இருந்து சிறப்பு ரயில்களை  இயக்கப்படுகிறது.  நேற்று முன்தினம் இயக்கப்பட்ட 9 ரயில்களில் 9 ஆயிரம் பேர் பயணித்தனர்.  நேற்று 18 சிறப்பு ரயில்கள் முலம் 25,737 பயணிகள்  சென்றனர். அடுத்த 7 நாட்களுக்கு இந்த ரயில்களில் பயணிக்க, 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், ரயில்வேக்கு 45.30 கோடி  வருவாயாக கிடைத்துள்ளது.

அறிகுறி இருந்தால் கட்டணம் வாபஸ்

சிறப்பு ரயில்களில் பயணிக்கும் வெளிமாநிலத்தினருக்கு ரயிலில் ஏறும் போதும், இறங்கும் போதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.  ரயிலில் ஏறும் முன்பாக காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால், அந்த பயணிகள் ரயிலில் பயணிக்க  அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான முழு கட்டணமும் திருப்பி தரப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

167 பயணிகள் மாயம்

குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட சிறப்பு ரயிலில்  1,340 பேர் பயணம் செய்தனர். இந்த ரயில் உத்தரகாண்ட் மாநிலம்,  ஹரித்துவாரை அடைந்தபோது அதில் 1,173 பேர் மட்டும் இருந்தனர். 167 பேரை காணவில்லை. இதனால், ரயில்வே அதிகாரிகளும், சுகாதார  அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் ரயிலில் ஏறிய பிறகு மாயமானார்களா அல்லது ரயிலில் ஏறவில்லையா என்பது பற்றி  விசாரிக்கப்படுகிறது.

Related Stories:

>