×

நிம்மதியை கெடுக்கும் நிதி பற்றாக்குறை பணம் அச்சடிக்க நாங்க ரெடி; நகையை தர நீங்க ரெடியா?

* வீடுகளில் முடங்கிய தங்கத்தை வாங்க தயாராகிறது மத்திய அரசு

சென்னை: இந்திய பொருளாதாரம் சமீப காலமாகவே அசுர வேகத்தில் சரிந்து கொண்டிருக்கிறது. இதை மீட்க ஒவ்வொரு முறையும் அரசு எடுக்கும்  முயற்சிக்கு, கைமேல் பலன் அளிப்பதாக தெரியவில்லை. அதிலும், கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, நிலைமை  படுமோசம். அதுவரை இந்தியாதான் பொருளாதார வீழ்ச்சியை ஓரளவு சமாளித்து பிழைத்து வரப்போகிறது; 2 சதவீதம் வரையிலாவது பொருளாதாரம்  வளர்ந்து விடும் என்று சிலாகித்த பொருளாதார மற்றும் நிதி அமைப்புகள், வீழ்ச்சி நிச்சயம் என்பதை கட்டியம் கூற தொடங்கி விட்டன.
நிதி நெருக்கடியை போக்க மாநிலங்களுக்கு உரிமையான பங்கினை தரக்கூட நிதியில்லை என்று கைவிரித்து வந்த மத்திய அரசு, தற்போது பணத்தை  அச்சடிப்பது எனவும், அதற்கு ஈடாக தங்கத்தை இருப்பு வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டது என மத்திய அரசு வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:  பொருளாதாரத்தை அவசர கதியில் மீட்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. அதேநேரத்தில்,  நிதி பற்றாக்குறையும் உள்ளது. இந்த சூழ்நிலையில் தங்கத்துக்கு ஈடாக பணத்தை அச்சடித்தால், நிதி நிலையில் பாதிப்பு ஏற்படாது. ஆனால்,  இந்தியாவில் ஏராளமான தங்கம், வீடுகள் மற்றும் கோயில்களில் முடங்கி கிடக்கின்றன. இதை வெளியே கொண்டுவர வெளியிடப்பட்ட தங்க அடமான  திட்டத்தில் சொற்ப தங்கம்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது.  தற்போது, ஊரடங்கால் பலரின் வருமானம் பறிபோய் விட்டது. ஊரடங்கு  தளர்த்தப்பட்டதும், நகைக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க  நகைகளை இந்த கடைகளில் விற்று பணமாக்க திட்டமிட்டுள்ளனர்.  

இந்த சூழ்நிலையில், பணத்தை அச்சடிக்க அதற்கு ஈடான தங்கத்தை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிகள் மூலம் இதை  செயல்படுத்தும்போது, கணிசமான அளவுக்கு தங்கம் சட்ட ரீதியாகவே வந்து விடும். வீடுகளில் தங்க நகை வைத்திருப்போர், அதை வாங்கியதற்கான  ஆதாரத்தை அரசு கேட்குமோ என்று தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், தற்போதைய அரசின் திட்டப்படி, தங்க நகையை விற்க முன்வருவோரிடம்,  அதை வாங்கியதற்கான ஆதாரத்தை ஒரு போதும் அரசு கேட்காது. அதோடு, தங்க நகையை தருபவர்களிடம் அதற்கு ஈடான தங்க பத்திரங்களை  வழங்கும் திட்டமும் அரசிடம் உள்ளது என தெரிவித்தனர்.

பத்திரம் பலன் தருமா?
தங்க அடமான திட்டத்தில் 15 டன் தங்கம்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் பணத் தேவைக்காகத்தான் தங்கத்தை விற்கின்றனர்.  எனவே, பத்திரங்களை தருவது, அவசர பணத்தேவையை நாடும் சிறு குடும்பங்களுக்கு உதவியாக இருக்காது. பத்திரம் வாங்கிய அனைவரும் அதை  விற்க முடிவு செய்தால், அரசுக்கு மட்டுமின்றி, தனியார் துறையின் கடன் வாங்கும் திட்டத்துக்கும் சிக்கலாக அமைந்து விடும் என நகை  விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இறக்குமதி குறைய வாய்ப்பு
மக்களிடம் இருந்து நகைகளை வாங்கும் அரசு, அச்சடிக்கும் பணத்துக்கு ஈடாக உள்ள தங்கம் தவிர எஞ்சியதை நகை உற்பத்தியாளர்களுக்கு  வழங்கினால், வெளிநாடுகளில் இருந்து அவர்கள் தங்கம் இறக்குமதி செய்வது குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பணம் அச்சடிக்க தங்கம் இருப்பு அவசியமா?
* முன்பு கோல்டு ஸ்டாண்டர்ட் என்ற முறை பல நாடுகளில் இருந்தது. இரு நாடுகளுக்கிடையே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்கள் தங்கத்தின்  அடிப்படையிலேயே நிகழ்ந்தன. 1930களிலேயே பல நாடுகள் கோல்டு ஸ்டாண்டர்ட் முறையை கைவிட்டன.
* உலக நாடுகள் தங்களிடம் உள்ள தங்கத்தை 1 அவுன்ஸ் 35 டாலர் என்ற விகிதத்தில் பரிமாறிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா அறிவித்தது. 1971ல்  இந்த திட்டமும் நிறுத்தப்பட்டது.
* 1971க்கு பிறகு உலகநாடுகள் கரன்சி அச்சடிப்புக்கு ஈடாக  தங்கம் மற்றும் அசையும் சொத்துகளின் இருப்பு, அமெரிக்க டாலராக மாற்றுவதற்கான  விகிதம் இவைகளை நிர்ணயித்தன.
* ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடும் பணத்துக்கு ஈடாக, தங்கம், வெளிநாட்டு முதலீடுகளை, வைத்துள்ளது. எனினும், கரன்சிக்கு ஈடாக தங்கம் இருப்பு  வைக்க வேண்டும் என்ற நடைமுறை தற்போது ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது. இருப்பினும், அவசர காலத்தில் சமாளிக்க தங்கம் இருப்பு  வைப்பது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
* கடந்த 2018, 2019 ஆண்டுகளில் இருந்து உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தன. உலகிலேயே பெடரல் ரிசர்வ்  வங்கியில்தான் அதிக தங்கம் இருப்பு வைத்துள்ளது.

Tags : Indian Economy, Jewelry, Corona, Curfew
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...