×

திமுக எம்பிக்கள் புகாருக்கு தலைமை செயலாளர் மறுப்பு

சென்னை: திமுக எம்பிக்கள் புகாருக்கு தலைமை செயலாளர் சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர்  சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களை வழங்க டி.ஆர்.பாலு எம்பி தலைமையில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சந்திக்க வருவதாக கூறப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கினேன். மாலை மத்திய நிதி அமைச்சரின் கொரோனா பாதிப்புக்கான நிவாரண திட்ட அறிவிப்புகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அதை நானும், நிதித்துறை செயலாளரும் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது டி.ஆர்.பாலு எம்பியும் மற்றவர்களும் நுழைவுவாயிலுக்கு  வந்துவிட்டனர். அவர்களை வரவேற்று சோபாவில் அமர வைத்தேன். அப்போது டி.ஆர்.பாலு எம்பி, 1 லட்சம் மனுக்களை ஒப்படைப்பதாக தெரிவித்து,  உங்கள் பதிலை சொல்லுங்கள், எதிர்க்கட்சி தலைவரிடம் தெரிவிக்கிறேன் என்றார். விரைவாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவியுங்கள் என்றேன்.  அதற்கு, எத்தனை நாட்களுக்குள் மனுக்களை அலுவலர்களுக்கு அனுப்புவீர்கள் என கேட்டார். ஒரு லட்சம் மனுக்கள் உள்ளன, அவற்றை அலுவலர்  வாரியாக பிரிக்க வேண்டும். தற்போது கொரோனா பாதிப்பால் குறைந்த அலுவலர்கள்தான் பணி செய்கின்றனர். அதனால் உறுதியாக தேதியை கூற  இயலாது என்றேன்.

பணியாளர் குறைவாக உள்ளதால் தேதியை உறுதியாக கூற முடியாது என்று சொல்லவா என டி.ஆர்.பாலு எம்பி கூறினார். அப்படி கூற வேண்டாம்,  மனுக்களை கொடுத்தோம், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்று கூறுங்கள் என்றேன். உடனே, அவர் அலுவலர் இல்லை என்பதால் நடவடிக்கை  எடுக்கவில்லை என தெரிவிக்கிறோம் என்றார்.  இந்த சந்திப்பு முடிந்தபின், உடனடியாக இந்த மனுக்களை முதல்வரின் தனிப்பிரிவுக்கு நேற்றே  அனுப்பி, மனுக்களை அலுவலர் வாரியாகவும், துறை வாரியாகவும் பிரித்து ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க  அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Chief Secretary ,MPs ,DMK , DMK MPs, Chief Secretary
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...