×

திமுக எம்பிக்களை அவமரியாதை செய்த தமிழக தலைமை செயலாளர் மீது உரிமை மீறல் நடவடிக்கை

* மக்களவை சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் கடிதம்

சென்னை: திமுக எம்பிக்களை அவமரியாதை செய்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று  திமுக மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.   இது குறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்தவற்காக திமுக  சார்பில் தொடங்கப்பட்ட ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 14  லட்சம் பேருக்கு தேவையான உதவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நிர்வாகிகள் செய்தனர்.

மேலும் மீதமுள்ள 1 லட்சம் மனுக்களை பொறுத்தமட்டில் அரசு துறைகள் மூலம் தான் தீர்வு காணப்பட வேண்டும் என்பதால் அந்த மனுக்களை  தமிழக அரசின் தலைமை செயலாளரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தும்படி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி,  கடந்த 13ம் தேதி  நான் மற்றும் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தலைமை செயலாளர்  சண்முகத்தை நேரில் சந்தித்து மனுக்களை ஒப்படைக்கவும், அதன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் முன்கூட்டியே அனுமதி பெற்று  சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்கு நேரில் சென்றோம்.  

 ஆனால், தலைமை செயலாளர் எங்களை கருத்தில் கொள்ளாமல் அதிர்ச்சியூட்டும் வகையில் மரியாதை குறைவாக நடத்தினார். குறைந்தபட்ச  வரவேற்பு முறைகளை கூட அவர் பின்பற்றவில்லை. எங்களை இருக்கையில் அமருங்கள் என்று கூட அவர் கூறவில்லை. வேறு வழியில்லாமல்  நாங்களாகவே இருக்கையில் அமர்ந்தோம். அந்த அறையில் தொலைக்காட்சி அதிக ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. தலைமை செயலாளர்  சண்முகம் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர எங்களை கண்டு கொள்ளவில்லை. எங்களது பேச்சுவார்த்தைக்கு தொலைக்காட்சியின்  அதிக ஒலி இடையூறாக இருக்கும் என்று கருதி தலைமை செயலாளரின் உதவியாளர் தொலைக்காட்சியை ஆப் செய்வதற்கு சென்ற போது தலைமை  செயலாளர் அதை தடுத்து விட்டார்.

நானும், தயாநிதி மாறனும் மத்திய அமைச்சராக இருந்தவர்கள் என்பதை கூட அவர் கருத்தில் கொள்ளவில்லை. இருந்த போதிலும், ஒன்றிணைவோம்  வா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை அளித்து அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கு குறிப்பிட்ட  கால அவகாசத்தை நிர்ணயிக்கும்படியும் எடுத்துக்கூறினோம். ஆனால் அதற்கு தலைமை செயலாளர், போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில்  மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது என்று கூறினார். மீண்டும் ஒரு முறை இந்த கோரிக்கையை  வலியுறுத்திய போது, வெளியில் சென்று பத்திரிகையாளர்களை சந்திக்க போகிறீர்களா. பத்திரிகையாளர்களிடம் எதை வேண்டுமானாலும்  சொல்லுங்கள். அதைப்பற்றி கவலை இல்லை என்றார்.

இதைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். மேலும், மனு அளிக்க வந்துள்ளவர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள்  என்பதை மறந்து எடுத்தெறிந்து பேசும் விதமாக உங்களை போன்ற ஆட்களிடம் இது தான் பிரச்னை என்று பொறுப்பற்ற முறையில் பேசினார்.  இதற்காக அவர் தனது வருத்தத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. கொரோனா தொற்றால் அல்லல்படும் தமிழக மக்களுக்கு நிவாரண உதவி  பெற்றுத்தர வேண்டுகோள் விடுக்க சென்ற எங்களை கண்ணியக்குறைவாக நடத்தியதோடு மட்டுமல்லாமல் வேண்டுமென்றே அவமரியாதை செய்த  தலைமை செயலாளர் சண்முகம் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அந்த  அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Chief Secretary ,MPs ,Tamil Nadu ,DMK ,Nadu , DMK MPs, Tamil Nadu Chief Secretary, Lok Sabha Speaker
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...