×

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும்: வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: வெளிநாடு, வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைபடுத்துதல் தொடர்பாக புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், அனைத்துத்துறை கூடுதல் செயலாளர்கள், தமிழக போலீஸ் டிஜிபி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கொரோனாவுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தால் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.  
* ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
* பிற மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம். அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். முக்கியமாக, குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஒரு வேளை கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன் பிறகும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றால், அவர்கள் வீட்டிற்கு சென்று 7 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
* அந்த நபருக்கு வீடு இல்லையென்றால், அரசு முகாம்களில் எஞ்சியுள்ள 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்கள் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். யாருக்கு பாசிட்டிவ் வருகிறதோ, அவரை உடனே அந்நபரை மருத்துவமனையில் அனுமதிக்க
வேண்டும்.
*  வெளிநாட்டு நபருக்கு நெகட்டிவ் என வந்தால் அவர் அரசு முகாம்கள் அல்லது ஓட்டல்களில் 7 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அப்போதும் அவருக்கு சோதனையில் நெகடிவ் என வந்தால், அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
* நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள், குடும்ப உறுப்பினர்களின் இறுதி சடங்குகிற்கு செல்பவர்கள், கர்ப்பமாக உள்ளவர்கள், 75 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மற்றவர்களின் உதவியை நாடும் முதியவர்கள் என 4 தரப்பினருக்கு மேற்கூறிய வழிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இதனிடையே எவரேனும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக வழிமுறைகளில் இருந்து விலக்கு கோரினால், அவர்களுக்கு மருத்துவ குழு மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். மேலும் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் தொடர்பாக வழிமுறைகளில் இருந்து விலக்கு பெறுவோர் தங்களது விவரங்களை கட்டாயம் மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி கமிஷனர் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலைக்கு போக முடியாதா?
சென்னையின் பக்கத்து மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமான சாப்ட்வேர் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்புதூர் முதல் காஞ்சிபுரம் வரை தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்முடிப்பூண்டியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் சென்னையில் உள்ள மக்கள்தான் அதிகமாக பணியாற்றுகின்றனர்.

அவர்கள் தினமும் இரு மற்றும் 4 சக்கர வாகனத்தில் பயணம் செய்கின்றனர். தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால், 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. அப்படி என்றால், இந்த தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஊழியர்களின் கதி என்ன? அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்களா என்ற சந்தேகம் நிறுவனங்களிடமும், ஊழியர்களிடமும் எழுந்துள்ளது.


Tags : Government of Tamil Nadu , District, Government of Tamil Nadu, Corona, Curfew
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...