×

நாடு முழுவதும் கொரோனாவால் 50 நாட்கள் ஊரடங்கின் ‘ரிசல்ட்’ என்ன?... பாதிப்பு இரட்டிப்பாவதால் தொடரும் அச்சுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு 50 நாட்கள் முடிந்த நிலையில், பாதிப்பு இரட்டிப்பாவதால் மக்களிடம் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தி நேற்றுடன் 50 நாட்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரங்கள் மூலம் சில தகவல்களை அறியமுடிகிறது. பாதிக்கப்பட்டோரை மீட்கும் விகிதம் அதிகரிக்கிறது, குறைந்த இறப்பு விகிதம், தொற்று பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளன. ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருவதால் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்தடுத்து இரட்டிப்பாகி வருகிறது.

அதனால், கொரோனா அச்சுறுத்தல் மக்களிடையே ெதாடர்ந்து நீடிக்கிறது. அதாவது பாதிப்பு மற்றும் இறப்பு (அடைப்புக் குறிக்குள்) விபரத்தின்படி பிப். 15ல் - 3 (0), மார்ச் 15ல் - 114 (2), ஏப். 15ல் - 12,370 (422), ஏப். 30ல் - 34,863 (1,152), மே 14ல் - 78,055 (2,551) என்ற நிலையில் உள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. பலி எண்ணிக்கையும் இரட்டிப்பாகி உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை இன்றைய நிலையில் 26,400 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 3.2% ஆகவும், மீட்பு விகிதம் 32.8% ஆகவும் உள்ளது. மீட்பு விகிதமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஆய்வாளர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் கூறுகையில், ‘புள்ளிவிபரங்கள் சாதகமான மற்றும் திறமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு சான்றாக உள்ளன. பாசிடிவ் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கூட இறப்பு குறைந்தும் மற்றும் மீட்பு  அதிகரித்தும் உள்ளதால் இது சிறப்பான மருத்துவ மேலாண்மையை காட்டுகிறது. இருப்பினும், மும்பை, அகமதாபாத், சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் அதிக எண்ணிக்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மனநிறைவை ஏற்படுத்தவில்லை. பொருளாதார ஆலோசனைக் குழுவின் தரவு பகுப்பாய்வின்படி, பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை கடந்த 16 நாட்களில் 4.5% ஆக அதிகரித்துள்ளது.

பல மாநிலங்களில் பாசிடிவ் விகிதம் குறைந்துவிட்டது. பரிசோதனைகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இப்போது ஒவ்வொரு நாளும் 95,000 மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாடு முழுவதும் சோதனை திறனை ஒரு நாளைக்கு 1,00,000 மாதிரிகளாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா, காஷ்மீர், கேரளா, சட்டீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் குறைந்த பாசிடிவ் விகிதத்துடன் தொற்றுநோயை கட்டுப்படுத்தி வருகின்றன. இருப்பினும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்கள் தினசரி அடிப்படையில் கணிசமான எண்ணிக்கையிலான பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன’ என்றனர்.


Tags : country ,curfew ,Corona , Nationwide, Corona, Curfew, Result
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!