×

போக்குவரத்து வசதி தொடங்காததால் கைவினை கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு

உடன்குடி: கொரோனா எதிரொலியாக போக்குவரத்து வசதி தொடங்காததால் கைவினை கலைஞர்கள் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. இதுபோல் பனைத்தொழில் சார்ந்த கைவினை கலைஞர்களும், சிறு, குறு வியாபாரிகள், தினக்கூலிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். தற்போது தளர்வு செய்யப்பட்டுள்ளது.

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில் கொடைவிழா, திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனைப்பொருட்களில் இருந்து கூடைகள், பெட்டிகள் உள்ளிட்ட கைவினைப்பொருட்கள் கலைநயத்துடன் உருவாக்கி, வண்ணங்கள் தீட்டப்பட்டு சந்தையில் நல்ல விலைக்கு விற்கப்படும். வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து முடைபவர்களிடமே வாங்கி செல்வதுண்டு. தற்போது ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள நிலையில் சரிவர போக்குவரத்து நடைபெறாததால் தொழிலாளர்கள் செய்த கைவினைப்பொருட்கள் அனைத்தும் கிடப்பில் கிடக்கிறது.

அவை பூசனம் பூத்து வீணாகி வருகிறது. பல நாட்கள் கஷ்டப்பட்டு கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பெட்டிகள் வீணாகி வருவதுடன் கைவினை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கைவினை கலைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



Tags : Craftsmen ,transport facility , Transportation, Craftsmen, Livelihood
× RELATED சீனாவின் வுகான் நகரில் கரோனா வைரஸ்...