×

துணை ராணுவ படை உணவகங்களில் உள்நாட்டு தயாரிப்பு மட்டும்தான்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: சி.ஆர்.பி.எப்., மற்றும் பி.எஸ்.எப்., உள்ளிட்ட துணை ராணுவ படையினருக்கான உணவகங்களில் ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு துணை ராணுவ படையினரின் உணவகங்களில், ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய மத்திய உள்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனா பாதிப்பில் நாடு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

உள்ளூர் தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இது உலகின் தலைமைக்கான பாதையில் நிச்சயம் கொண்டு செல்லும்’ என்று பதிவிட்டுள்ளார். இதன்படி ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து துணை ராணுவ படையினரின் உணவகங்களிலும் உள்நாட்டில் தயாரான பொருட்களை மட்டுமே விற்பனை செய்யப்படும். நாடு முழுவதுவம் 10 லட்சம் துணை ராணுவத்தினர் உணவகங்களில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினர் உட்பட 50 லட்சம் பேர் உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை பயன்படுத்துவர். துணை ராணுவத்தினரின் உணவகங்களில் ஆண்டு தோறும், ரூ.2,800 கோடி மதிப்பில் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.


Tags : Home Ministry , Auxiliary Army, Domestic Product, Home Ministry
× RELATED டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!