×

ஒரு ஆண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தனது ஊதியத்தில் 30 சதவிகிதத்தை ஓராண்டுக்கு விட்டுக்கொடுக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே பி.எம்.கேர்ஸ் நிதிக்கு தனது மார்ச் மாத ஊதியத்தை குடியரசுத் தலைவர் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிக்கனத்தை கடைபிடிப்பதிலும், வீண் செலவுகளை தவிர்த்தலிலும் நாட்டுக்கு உதாரணமாக குடியரசுத் தலைவர் மாளிகை இருக்க வேண்டும், அதன் மூலம் சேமிக்கும் நிதி கொரோனா வைரஸுக்கு எதிரான போருக்காக பயன்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத்தலைவர் மாளிகை அறிக்கையில் கூறியதாவது; குடியரசுத் தலைவர் மாளிகையில் நடப்பு ஆண்டில் எந்தவிதமான புதிய கட்டிடப்பணிகளும் நடக்காது, ஏற்கெனவே நடந்து வரும் பணிகள் மட்டுமே நடக்கும். குடியரசுத் தலைவர் மாளிகையில் பராமரிப்பு பணிகள், பழுதுநீக்கும் பணிகள் போன்றவை இந்த ஆண்டு குறைக்கப்பட்டு செலவு மிச்சப்படுத்தப்படும். மின்சிக்கனம், தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்தி வளங்களை மிச்சப்படுத்தும் முயற்சி எடுக்கப்படும். விருந்துகள், முக்கிய விழாக்களுக்குக் குடியரசுத்தலைவர் செல்ல லிமோசைன் சொகுசு கார் வாங்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தி்ட்டமிட்டிருந்தார், அந்த திட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.

ஏற்கெனவே பயன்படுத்தும் காரையே பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக ராம்நாத் கோவி்ந்த் தெரிவித்துள்ளா். இந்த சிக்கன நடவடிக்கையால் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 20 சதவீதம் சேமிக்க முடியும். இந்த சிக்கன நடவடிக்கையால் ஒப்பந்த தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாலும் எந்தவிதமான பாதகமான தாக்கமும் ஏற்படாது. அதேசமயம் குடியரசுத் தலைவர் மாளிகை மூலம் ஏழை மக்களுக்கு அளிக்கும் உதவியில் எந்த விதமான தடங்கலும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ramnath Govind ,Republic ,President , Decision of Prime Minister Relief Fund, President, Ramnath Govind
× RELATED மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு...