×

கொரோனாவால் பாரம்பரியத்திற்கு வந்த ஆபத்து : வழக்கறிஞர்கள் கருப்பு கவுன், கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : வழக்கறிஞர்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் மனித வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகளை நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே போல ஒரு தீவிர நடவடிக்கையில், இந்திய உச்சநீதிமன்றம் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டுகளை வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க உள்ளதாக தெரிகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜராகும் போது வழக்கறிஞர்கள் கருப்பு கோட்டு, கருப்பு கவுன், வெள்ளை கழுத்து பட்டை ஆகியவற்றை அணிவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பிறப்பித்த உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றம் செகரட்டரி ஜெனரல் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது;-

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையிலும் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் இனி சாதாரணமான வெள்ளை சட்டை, வெள்ளை சல்வார் கமீஸ் அல்லது வெள்ளை புடவை மற்றும் வெள்ளை கழுத்துப் பட்டையை தற்போதைய சுகாதார சூழ்நிலை உள்ளவரை அல்லது அடுத்த உத்தரவு வரை அணிந்து கொண்டு காணொலி மூலம் விசாரணையில் கலந்து கொள்ளலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது., இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona, risk, lawyers, black gown, line, exclusion, Supreme Court
× RELATED திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..!