×

கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, உயிரிழப்புகள் குறித்த உண்மையை மறைப்பது ஏன்? டிரம்ப்புக்கு நான்சி பெலோசி கண்டனம்

வாஷிங்டன்: கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, உயிரிழப்புகள் குறித்து உண்மையை கூற வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் 44,24,000 பேர் பாதிக்கப்பட்டு 2,97,000-க்கும் அதிகமானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 14,29,000-க்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு 85,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து கூறப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக தொற்று நோய் தடுப்பு பிரிவினரும் செனட் உறுப்பினர்களும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இந்நிலையில் டிரம்ப்பின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அமெரிக்காவின் உண்மை நிலையை தெரிவிக்குமாறு ஒற்றை வரியில் கேள்வி எழுப்பியுள்ளார். கிருமி சாசினியை குடிப்பது, தானாக வைரஸ் போய்விடும், இது போன்ற அதிசயம் நடக்கும் என்பன போன்ற விஞ்ஞானத்துக்கு உள்படாதவற்றை கூறி மக்களை குழப்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பள்ளிகளை திறக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்தது மாகாண ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் கடைகள், கட்டுமான பணிகள், உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் ஈபெல் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இயற்கை அழகு மிக்க இடங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் ரசித்து வருகின்றனர்.


Tags : corona ,United States ,deaths ,Nancy Pelosi , Corona, USA, Trump, Nancy Pelosi
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!