×

கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000 அடி ஆழத்திற்கு உள்ளே இறங்கி தங்கம் திருட முயன்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

பெங்களூரு : கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000 அடி ஆழத்திற்கு உள்ளே இறங்கி தங்கம் திருடுவதற்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் மிக ஆழமான 2வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும். இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2001ம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தங்க சுரங்கத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

அப்போதிலிருந்து பராமரிப்பின்றி இந்த சுரங்கம் உள்ளது. இந்த நிலையில் மொத்தம் 5 பேர் கொண்ட கும்பல் கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் திருட சென்றுள்ளனர். முதலில் 3 பேர் 1000 அடி தூரம் ஆழத்திற்கு சென்றுள்ளனர். 3 பேரும் சுரங்கத்துக்குள் ஆக்சிஜன் கிடைக்காமல் திணறி உள்ளனர். பின்னர் சில நேரத்துக்குள் மயங்கி விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நள்ளிரவு என்பதால் முதலில் 2 பேர் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழந்த மீதமிருக்கும் ஒருவரின் சடலத்தை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதோடு இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோலார் தங்க சுரங்கத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களில் நீண்ட நாள் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kolar Gold Mine , Kolar, gold mine down, gold, death
× RELATED கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்...