×

பீகார், உபிக்கு செல்வதற்காக கேரளாவில் இருந்து நடந்தே வந்த பெண் உள்பட 27 தொழிலாளர்கள்: மேட்டூர் சோதனை சாவடியில் சிக்கினர்

மேட்டூர்: கேரளா மாநிலத்தில் இருந்து பீகார் மற்றும் உத்தர பிரதேசத்துக்கு நடந்தே செல்ல முயன்ற பெண் உள்பட   27 தொழிலாளர்களை, மேட்டூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். கேரள மாநிலம் மன்னார்காடு மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளிலுள்ள டீக்கடைகள், பேக்கரிகள் மற்றும் ஓட்டல்களில்  நூற்றுக்கணக்கான பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள்  பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கு காரணமாக வேலை இழந்த அவர்களை பராமரிக்க  முடியாததால், அவர்கள் வேலை செய்து வந்த ஓட்டல் மற்றும் பேக்கரி  நிர்வாகங்கள், ஒரு பெண் உள்பட 27 தொழிலாளர்களை,  மன்னார்காடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களுக்கு போலீசார் எவ்வித உதவியும் செய்யவில்லை. இதையடுத்து, தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்வதாக தொழிலாளிகள் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசாரும் அவர்களை அனுப்பி வைத்தனர்.

பாலக்காடு வரை வேனில் வந்து, அங்கிருந்து சரக்கு லாரி மூலம் பவானி லட்சுமி நகர்  பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்து நடை பயணமாக வந்த அவர்களை, மேட்டூர்  மாதையன்குட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை  நடத்திய பின்னர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சுகாதாரத் துறையினர்,  அவர்களுக்கு உடல் வெப்ப அளவை பரிசோதனை செய்ததுடன்,  அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்து உணவு வழங்கினர். சிறப்பு முகாமிற்கு வந்த மேட்டூர் தாசில்தார் சுமதி, அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் இதுகுறித்து கலெக்டர் ராமனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது  ஆலோசனையின் பேரில், வெளிமாநில தொழிலாளர்களை தமிழக எல்லையை கடந்து,  கர்நாடக மாநில எல்லையான  அத்திப்பள்ளி வரை தனி வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

Tags : Ubi ,Kerala ,Mettur ,Bihar ,checkpoint , 27 workers,woman from Kerala, Bihar, Ubi, Mettur checkpoint
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...