×

மத்திய அரசின் விதிவிலக்கை மீறி தனியார் பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி செலுத்தக்கோரி மிரட்டல்: முதல்வருக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கம் புகார்

நெல்லை: தமிழ்நாடு தனியார் நர்சரி பிரைமரி, மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செயல்படும் தனியார்  பள்ளிகளில் சுமார் 50 ஆயிரம் பஸ், வேன்கள் இயங்கி வருகிறது. இந்த  வாகனங்களுக்கு எப்சி செய்ய சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் கட்ட மத்திய,  மாநில அரசுகள் ஜூன் 30ம் தேதி வரை விதிவிலக்கு வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் தொலைபேசியில் அழைத்து பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி இருக்கை வரியை கட்டச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தமிழக அரசு போட்டுள்ள இந்த ஆணை தங்களுக்கு வரவில்லை என்றும், கணினியில் 30.06.2020 வரை விதிவிலக்கு வழங்கியதற்காக மாற்றப்படவில்லை. எனவே எங்களால் ஏற்க முடியாது என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்து உடனே அனைத்து வரிகளையும் கட்டப்பட வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதித்து வசூலிக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள்.

இந்த கொரோனா காலத்தில் பழைய, புதிய கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது. பள்ளி செயல்படக் கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நேரத்தில் லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டும் என்று வற்புறுத்துவது நியாயமல்ல. தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தனியார் பள்ளி வாகனங்களுக்கு வரி கட்டச் சொல்லி மிரட்டி வருவதை உடனே கைவிட்டு ஜூன் 30ம் தேதி வரை  உள்ள விதிவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர்,  போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர், ஆணையாளர் இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் உரிய விதிவிலக்கு ஆணையை விளக்கியும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா ஊரடங்கில் ஓடாத பள்ளி வாகனங்களுக்கு வரிவிலக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Matriculation school association ,government , Road tax ,private school vehicles, threatened, government,Matriculation school association complains
× RELATED சாலை வரி தொடர்பாக எந்த ஒரு...