×

உன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல.... நெல்லை மண்ணை பிரிய விரும்பாத வடமாநில சாலையோர வியாபாரிகள்

நெல்லை: நெல்லை தான் எங்கள் வாழ்வாதாரம், இங்கிருந்து சொந்த ஊர் செல்ல விருப்பமில்லை எனக்கூறி வடமாநில சாலையோர வியாபாரிகள் வழக்கம்போல் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் போதிய வருமானம் இல்லாததால் அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.  நெல்லை மாவட்டத்தில் இருந்து பலர் கேரளா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பிழைப்பு தேடி சென்று தங்களுக்கென ஒரு இருப்பிடத்தை ஏற்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் ராஜஸ்தான், பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செங்கல் சூளைகள், கட்டிட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  நெல்லையில் சந்திப்பு பகுதியில் உள்ள விடுதிகளிலும், மீனாட்சிபுரத்திலும் சுமார் 50 பேர் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி, சந்திப்பு ரயில், பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சாலை ஓரங்களிலும், நெல்லையப்பர் கோயில் ரதவீதிகளிலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் காற்று தலையணை, பலூன், செல்போன் ஸ்கிரீன், மாஸ்க், கையுறைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை  செய்து பிழைபபு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டே குடும்பம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் வருமானம் இல்லாத நிலையில் கடந்த 45 நாட்களாக சிரமத்திற்குள்ளாகினர்.

இவர்களின் நிலையை கேள்விபட்டு சமூக ஆர்வலர்கள் சிலர் கோதுமை மாவு, பருப்பு, எண்ணெய், பல்லாரிகளை வழங்கினர். கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அரசு தளர்த்தியதால் மீண்டும் பலூன், காற்று தலையணை விற்பனையை துவக்கி உள்ளனர். சந்திப்பு பஸ்நிலையம், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் நடமாட்டம் போதிய அளவு இல்லாததால் பொருட்கள் விற்பனையாகவில்லை. இதனால் மாநகர பகுதி முழுவதும் தற்போது நடந்தே சென்று பொருட்களை விற்பனை செய்கின்றனர். இருந்த போதும் கிடைக்கும் வருமானம் அவர்களது சாப்பாட்டிற்கே போதவில்லை. இதுகுறித்து நடைபாதை வியாபாரிகள் கூறுகையில்; ‘நெல்லை மண்தான் எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இதனால் நெல்லையை விட்டு செந்த ஊர் செல்ல விருப்பம் இல்லை. தடை உத்தரவால் பலூன், ஏர்பில்லோ உள்ளிட்ட பொருட்கள் விற்பனை இல்லை. வருமானம் இன்றி பசியால் வாடுகிறோம். சிலர் நிவாரண பொருட்களை அன்புடன் வழங்கினர். அதுவும் தற்போது காலியாகிவிட்டது. தடை உத்தரவு தளர்த்தப்பட்ட போதும் பொதுமக்கள் அதிகம் விரும்பாததால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’ என்றனர்.

Tags : road ,world , best road , world
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி