×

கொரோனாவால் ரயில்களில் பொருட்கள் விற்பனை, கூலித்தொழில் முடக்கம் 1.60 லட்சம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு

* தமிழக அரசின் கருணை பார்வைக்கு காத்திருப்பு
* வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட கோரிக்கை

பாணாவரம்: கொரோனாவால் ரயில்களில் பொருட்கள் விற்பனை, கை தொழிலும் முடங்கியுள்ளதால், 1.60 லட்சம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பரிதவித்து வருகின்றனர். தமிழக அரசின் கருணை பார்வைக்கு காத்திருக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வரும் நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நாடிதுடிப்பு அடங்கும் வகையில், அடுத்த வேளை சோற்றுக்கு கையேந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் 2 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றக் கூடிய ரயில் சேவையை நம்பியே நாடு முழுவதும் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில், 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்ளனர். மேலும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் சிலர் ஆடு, மாடு மேய்த்தல் உள்ளிட்ட பல்வேறு விவசாய கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் வியாபாரம் செய்பவர்களாகத்தான் உள்ளனர்.

இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ரயில்களில், தின்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், கைகுட்டை, எழுதுபொருட்கள், வாசனை திரவியங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை ரயில்களில் தினம்தோறும் விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கின்ற சொற்ப வருவாயில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.  இதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரயில்களில் வியாபாரம் செய்து பிழைத்து வந்தனர். சிலர் தங்களின் வசதிக்காக, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் போன்ற ஜங்ஷன் பகுதி ரயில் நிலையங்களுக்கு அருகில் வாடகை வீடு எடுத்து தங்கி, திருப்பதி, ஈரோடு, சேலம் பகுதிகளுக்கும் வியாபாரத்திற்காக ரயில்களில் சென்று வந்தனர். தங்களின் மொத்த வாழ்வாதாரமும் ரயில்களில் நடக்கும் விற்பனையை மட்டுமே நம்பியிருந்த நேரத்தில் தான் கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரயிலையே பிரதானமாக நம்பியிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, வாழ்வாதாரமின்றி, கையில் பணம் இல்லாமல் குடும்பம் நடத்த அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இன்றி, வறுமையில் தவித்து வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் மட்டும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு சார்பில் நிவாணரப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பொருட்களை வைத்து ஒரு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர் எவ்வளவு நாட்களுக்கு சாப்பிட முடியும் என்பது அரசுக்கே வெளிச்சம். மனிதநேயமுடைய தன்னார்வலர்கள் மூலமாக சில நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதால் பசியாறி வருகிறோம். எனவே அரசு பார்வையற்ற மாற்றத்திறனாளிகளுக்கு ₹5ஆயிரம் உதவித்தொகை வழங்கி எங்களது வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று அரசின் கருணை பார்வைக்கு காத்துள்ளனர்.

ரயில் சேவை நின்றதால், வாழ்வாதாரமும் நின்னு போச்சு
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 300 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளோம். நாங்கள் அனைவரும் தினமும் எங்களது வாழ்வாதாரத்திற்காக பொம்மைகள், புத்தகங்கள், கலர்பென்சில்கள் போன்றவற்றை ஒரு கையிலும், மறு கையில் குச்சியையும் கொண்டு, ஓடும் ரயிலில், வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டிருந்தோம். கொரோனாவால் ரயில்சேவை மட்டும் நிற்கவில்லை. எங்களது வாழ்வாதாரமும் தான் நின்னு போச்சு, இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரிடம் பலமுறை ெதாலை பேசியில் உதவிக்காக தொடர்பு கொண்டோம். ஆனால் இதுநாள் வரையில் எங்களுக்கு எந்த உதவியும் அவர் செய்யவில்லை. மற்ற மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என்று பலதரப்பினரிடமிருந்து 4 முறைக்கு மேல் நிவாரணப்பொருட்கள் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காதது மிகுந்த மன வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 மாவட்டங்களில் 9,500 பார்வையற்றோர்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 6,100 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 3,400 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மொத்தம் 4 மாவட்டங்களில் 9,500 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கொரோனா ஊரடங்கினால், உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்புக்கு அரசு பரிசீலிக்க வேண்டும்
பாணாவரம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி பி.ஏ, பி.எட் பட்டதாரி பெண் கூறுகையில், ‘’நாடு முழுவதும் நீட்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராடி வரும் சூழ்நிலையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், டெட் தேர்வில் 1, 2 மதிப்பெண்களில் தோல்வியுற்று ஆசிரியர் வேலையை இழந்து வருகிறோம். பெரும்பாலான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். 70 சதவீதம் பேர் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். எங்களுக்குரிய வேலைவாய்ப்பை அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். எங்களுக்கு டெட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 45க்கு வயதுக்கு மேற்பட்ட என்னைப் போன்றவர்கள், கனவில் கூட ஆசிரியர் பணியை நினைத்துப் பார்க்க முடியாது  நிலை உள்ளது” என்றார்.

Tags : Sale of Goods ,persons ,Corona ,Freeze , Sale , trains by Corona, freeze on hire, 1.60 lakh blind persons
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது