×

ரூ.250 கோடி தேங்காய் எண்ணெய் வியாபாரம் வீழ்ச்சி

காங்கயம்:  கொரோனா ஊரடங்கு காரணமாக காங்கயத்தில் தேங்காய் எண்ணெய் வியாபாரத்தில் ரூ.250 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், மூலனூர் சென்னிமலை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது 500க்கும் மேற்பட்ட தேங்காய் உலர்களங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தேங்காய் பருப்பு உலர்த்தப்பட்டு (கொப்பரை) காங்கயத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட ஆலைகள் மூலம் எண்ணெயாக பிழிந்து எடுக்கப்படுகிறது. பிறகு தேங்காய் எண்ணெய் கேரளா உள்பட பல்வேறு வட மாநிலங்களுக்கு தினமும் 20 டேங்கர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதனால் தினமும் ரூ.4 முதல் 6 கோடி அளவில் வியாபாரம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 48 நாட்களாக ஊரடங்கு உள்ளதால் காங்கயத்தில் இருந்து அனுப்பப்படும் தேங்காய் எண்ணெய் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நிறுவனம் மட்டும் குறைந்த அளவில் எண்ணெய் உற்பத்தி செய்து தினமும் சுமார் 5 டேங்கர் லாரி மட்டும் அனுப்பி வருகின்றனர். இதனால் காங்கயம் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த 48 நாட்களில் காங்கயத்தில் ரூ.250 கோடி அளவில் வியாபாரம் நடைபெறாமல் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் இழப்பைச் சந்தித்துள்ளனர். மேலும் இதில் 1 லட்சம் பணியாளர்கள் வேலை இழந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்க தலைவர் அருணாச்சலம் கூறியதாவது: காங்கயத்தில் இருந்து சுமார் ரூ.5 கோடி மதிப்பில் தினமும் 20 டேங்கர் லாரிகளில் தேங்காய் எண்ணெய் வெளியூர் மற்றும் வெளிமாநிலம் அனுப்பப்பட்டு வந்தது. கடந்த 48 நாட்களாக கொரோனா ஊரடங்கால் தேங்காய் எண்ணெய் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது சுமார் 5 டேங்கர் லாரிகளில் எண்ணெய் அனுப்பப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய் தொழில் பாதிக்கப்பட்டதால் ரூ.250 கோடி அளவில் வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காங்கயம் பகுதி கொப்பரை உலர்த்தும் தொழிலும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தொழில் பழைய நிலைக்கு திரும்ப மேலும் 2 மாதம் ஆகலாம். இவ்வாறு அருணாச்சலம் கூறினார்.

Tags : Coconut oil, business falls , Rs 250 crore
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...