×

வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் காளான் விற்பனை கடும் பாதிப்பு: நஷ்டத்தை தவிர்க்க குறைந்த விலைக்கு விற்பனை

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மொட்டு காளான் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர ெகாய்மலர் சாகுபடி, சைனீஷ் வகை காய்கறிகள், ஸ்ட்ரா பெரி மற்றும் காளான் ஆகியவை உற்பத்தி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில் 100க்கும் மேற்பேட்டோர் மொட்டு காளான் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் காளான் உள்ளூரில் விற்பனை செய்வதை விட வெளியூர்களுக்கே அதிகளவு அனுப்புகின்றனர். குறிப்பாக, கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் மற்றும் சென்னை போன்ற பகுதிகளுக்கு அதிகளவு இந்த காளான்கள் அனுப்பப்படுகிறது. ஒரு 200 கிராம் பாக்கெட் சாதரண நாட்களில் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படும். முகூர்த்த நாட்களில் தேவை அதிகரிக்கும்போது, காளான் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது காளான் விலை சற்று அதிகமாக இருக்கும். இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காளான் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால், இங்கு உற்பத்தி செய்யப்படும் காளான் உள்ளூரிலேயே விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள், வியாபாரிகள் வீடு வீடாக சென்று காளான் விற்பனை செய்து வருகின்றனர். இதில் 200 கிராம் பாக்கெட் ரூ.25 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்கப்படுகிறது. ஊட்டியில் தற்காலிக உழவர்சந்தை மற்றும் மார்க்கெட்டுக்களில் காலை நேரங்களில் 3 பாக்கெட் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே காளான் பிற்பகல் நேரத்தில் 4 பாக்கெட்டுகள் ரூ.100க்கு விற்கின்றனர்.  இது குறித்து காளான் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: ஒரு காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே அதிகளவு காளான் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், தற்போது சமவெளிப் பகுதிகளிலும் காளான் உற்பத்தி செய்கின்றனர். அந்த காளான் தரத்தில் குறைந்திருந்த போதிலும், ஊட்டி காளான் என பொய்ச் சொல்லி விற்பனை செய்கின்றனர். இதனால், ஊட்டி காளான் வியாபாரம் பாதிக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு மாதங்களாக நாங்கள் உற்பத்தி செய்யும் காளான் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம். இதனால், அதிக நஷ்டத்தை தவிர்க்க உள்ளூரிலேயே மிகவும் குறைந்த விலைக்கு காளானை விற்பனை செய்கிறோம். இதே நிலை சில மாதங்களுக்கு தொடருமாயின், தொடர்ந்து இந்த ெதாழிலை மேற்கொள்ள முடியாது, என்றனர்.

Tags : Mushroom , severely impacted due ,inability ,outsource,low-cost sales , avoid loss
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...