×

ஊரடங்கால் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்வதில் சிக்கல்

ஈரோடு: கொரோனா ஊரடங்கால் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த 18 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர பகுதிகளில் உள்ள 60 வார்டுகளை சேர்ந்த மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் ரூ.484.45 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான திட்டப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி சந்தையில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் கூடிய வகையில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் அமைக்க கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக உள்ள வ.உ.சி. பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டது. ஈரோடு காளைமாடு சிலை அருகே மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு உள்ளது.  

இந்த குடியிருப்பை அகற்றி விட்டு இங்கு புதிய அடுக்குமாடி வணிக வளாகம் ரூ.14.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உள்ள குளம் கழிவுநீரால் மாசடைந்துள்ள நிலையில் இந்த குளத்தை தூர்வாரி பல்வேறு பணிகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல், ஈரோடு பெரும்பள்ளம் ஓடை 12 கி.மீட்டருக்கு ரூ.183.83 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் இந்த பணிகளில் உள்ளூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நிலையில் ஈரோடு மாநகர பகுதிகளில் கட்டுமான பணிகள் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்திருந்தனர். ஆனால், கொரோனாவால் அந்த பணிகளும் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு ஒப்பந்ததாரர்களே உணவு வழங்கி வந்தனர். தற்போது, ஈரோடு மாவட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சில தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் கட்டுமானத்தை பொருத்தவரை 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு பணிகளை துவங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், கடந்த 3 மாதமாக வேலையின்றி தவித்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.ரயில் சேவை துவங்கிய பிறகு அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். இதற்காக, 18 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். இதனால், மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி கட்டுமான பணிகளில் 90 சதவீதம் வடமாநில தொழிலாளர்களை கொண்டே பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர்கள் வடமாநிலத்தில் இருந்து அதிகளவில் தொழிலாளர்களை அழைத்து வந்து பணிகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதமாக வேலையிழந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றாலே போதும் என மனநிலைக்கு வந்துள்ளனர். இதனால், தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல உள்ளனர். ஊரடங்கில் கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாட்டுடன் விலக்களிக்கப்பட்ட நிலையில் பணிகள் துவங்கி உள்ளது. ஆனால், வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளதால் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. தேவையான ஆட்களை வேலைக்கு எடுத்துதான் பணிகளை செய்ய வேண்டி உள்ளது. சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் அலுவலக கட்டுமான பணி பாதிப்பு
ஈரோடு பெருந்துறை ரோட்டில் கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் பின்புறம் புதிதாக ரூ.41.60 கோடி மதிப்பீட்டில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. இந்த அலுவலக கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகலாக நடந்த கட்டுமான பணி கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு வேலை செய்து வந்த 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி உள்ளனர். இதனால், இந்த கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை முடிப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்கள் கிடைக்காமல் திணறல்

ஈரோடு மாநகர பகுதிகளில் கருங்கல்பாளையம், வைராபாளையம், பெரியஅக்ரஹாரம், கொங்கம்பாளையம், கங்காபுரம், ராசாம்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, சூரம்பட்டி, வெண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட சாய, சலவை, அச்சு தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒரு சில ஆலைகளை தவிர மற்ற ஆலைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் வெளியே வாடகைக்கு தங்கி இருந்து வேலைக்கு செல்கின்றனர். தற்போது, கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுத்து தங்களது ஊருக்கு செல்ல உள்ளதாக தொழிற்சாலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக, தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் ஆட்களை வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வர ஏஜெண்டுகள் இருப்பார்கள். இதற்காக தொழிற்சாலை நிர்வாகம் கமிஷன் கொடுத்து வந்தனர். ஆனால், நாளடைவில் ஏஜெண்டுகளின் ஆதிக்கம் குறைந்த நிலையில் தற்போது வடமாநில தொழிலாளர்களை சந்தித்து நீங்கள் ஊருக்கு செல்லுங்கள். அப்போது தான் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதிக சம்பளம் கொடுப்பார்கள் என ஆசை வார்த்தை கூறி அனுப்பி வைப்பதிலேயே குறியாக உள்ளனர். இதனால், தொழிற்சாலை நிர்வாகம் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் திணறி வருகிறது.

Tags : North City , North City workers ,currencies,implementing smart city ,projects
× RELATED 15 வேலம்பாளையம் பகுதியில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்