×

கண்ணமங்கலம் அருகே ஆச்சரியம் கருத்தரிக்காமல், கன்று ஈனாமல் பால் கறக்கும் பசு: காலையில் 4 லிட்டர், மாலையில் 3 லிட்டர்

கண்ணமங்கலம்:  கண்ணமங்கலம் அருகே கருத்தரிக்காமல், கன்று ஈனாமல் பசு ஒன்று தினமும் 7 லிட்டர் பால் கறந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கத்தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன்(40), நிலத்தடி நீர்வள நிபுணர். இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். 10 வயதுடைய இந்த பசுவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக அளிக்க முயற்சித்தார். ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் கோயிலில் ஏற்கனவே நிறைய பசுக்கள் இருப்பதால், இதனை நீங்களே வைத்து பராமரியுங்கள் என தெரிவித்தார்களாம்.தொடர்ந்து தயாளன், தனது பசுவுக்கு சினை ஊசி போடாமலும், கருத்தரிக்க முயற்சி செய்யாமலும் வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பசுவின் மடிகாம்புகள் திடீரென பெரிதாக ஆரம்பித்தது. இதை கவனித்த தயாளன், பசுவை ஏதாவது பூச்சிகள் கடித்து வீங்கியுள்ளதா என அதன் காம்பை தடவி பார்த்தார்.

அப்ேபாது, பசுவின் காம்பிலிருந்து திடீரென பால் வந்தது. இதைப்பார்த்து ஆச்சரியமடைந்த அவர் பசுவிடம் இருந்து தொடர்ந்து பால் கறந்து வந்தார். ஆரம்பத்தில் ஒரு லிட்டர் பால் கறந்த பசு தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. தற்போது காலையில் 4 லிட்டர், மாலையில் 3 லிட்டர் பால் கறக்கிறது. பாலும் தரமாகவே உள்ளது. கருத்தரிக்காமல், கன்று எதுவும் ஈனாமல் பசு தினசரி 7 லிட்டர் பால் கறந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், `ஆயிரத்தில் ஒரு பசுவுக்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்டன் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்போது இதுபோல் கருத்தரிக்காமல், கன்றுக்குட்டி போடாமல் பால் கறக்கும் அதிசயம் நடக்கும்’ என்றனர்.



Tags : Kannamangalam ,Milking cow , Milking cow , Kannamangalam, 4 liters ,morning, 3 liters,evening
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே