×

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா?: கொரோனா தொடர்பான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 50 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17ம் தேதியோடு முடிவடைகிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே, மே 17ம் தேதிக்கு பிறகான திட்டம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 3ம் கட்ட ஊரடங்கு முடிய  இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி, 5வது முறையாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். குறிப்பாக, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில்  இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். இதுதொடர்பான புதிய வழிகாட்டு  நெறிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன் வெளியிடப்படும் என்றார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் தற்போதைய  நிலையில், ஊரடங்கு நீட்டிக்கலாமா?, தளர்த்தலாமா? என ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம்,  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதற்கிடையே, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம்  ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : Palanisamy ,professionals ,Tamil Nadu ,group ,consultation , Extend curfew in Tamil Nadu? Chief Minister Palanisamy's consultation with a group of specialist medical professionals
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...