×

முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம், பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது : கமல்ஹாசன் ட்வீட்

சென்னை : காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு மதுக்கடைகளைத் திறக்க நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதாடிக்கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார். தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் அரசின் முடிவை சரியானது அல்ல என பல தரப்பினரும் எதிப்பு தெரிவித்தனர். பெண்களும், பொதுமக்களும் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 25,922 பேரும், குஜராத்தில் 9267 பேரும், தமிழகத்தில் 9227 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பாதிப்பில் தமிழகம் 2ம் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு மதுக்கடைகளைத் திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. முன்னேற்றத்தில் முதலிடம் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,Kamal Haasan , Tamilnadu, backlash, number one, Kamal Haasan, tweet
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...