கோயம்பேடு உணவு தானிய கடைகளை திறக்க கோரி வழக்கு: சிஎம்டிஏ, மாநகராட்சிக்கு நோட்டீஸ்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில் சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 24ம் தேதி 4 நாட்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

 

அதனால், காய்கறிகளை வாங்க கோயம்பேடு மார்கெட்டில் சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்ததால் கொரோனா தொற்று பரவியது. இதனால் மே 5ம் தேதி முதல் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. சில்லறை காய்கறி விற்பனைக்கும், உணவு தானிய விற்பனைக்கும் தொடர்பு இல்லாத நிலையில் அனைத்து வளாகங்களும் மூடப்பட்டதால், உணவு தானியம் விற்பனை செய்யும் எங்கள் கடைகளும் மூடப்பட்டன. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல்  உணவு தானிய மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டதை பயன்படுத்தி சிலர் உணவு தானிய பொருட்களின் விலைகளை உயர்த்தி வருகின்றனர்.

காய்கறி சந்தைக்கு திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் இடம் ஒதுக கிய அதிகாரிகள் உணவு தானிய வியாபாரிகளுக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எனவே, கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு  வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க சிறப்பு அதிகாரி, சி.எம்.டி.ஏ, மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, இந்த வழக்கில் சிறப்பு அதிகாரி, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு  விசாரணையை மே 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories:

>