×

வடசென்னையை தொடர்ந்து தென் சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா: 10 மண்டலங்களில் பாதிப்பு அதிகம்

சென்னை:   வடசென்னையை தொடர்ந்து தென் சென்னையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம் வரை 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 814 பேர் குணமடைந்துள்ளனர்.  38 பேர் உயிரிழந்துள்ளனர்.  4012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் மொத்த பாதிப்பில் 64 சதவீதத்தினர் சென்னையை சேர்ந்தவர்கள். மொத்த மரணத்தில் 61 சதவீதம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

மண்டலம் வாரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக ராயபுரத்தில்  828 பேர், கோடம்பாக்கத்தில்  796 பேர், திருவிக நகரில் 622 பேர், தேனாம்பேட்டையில் 522 பேர், வளசரவாக்கத்தில் 426 பேர், அண்ணாநகரில்  405 பேர், தண்டையார்பேட்டையில் 362 பேர், அம்பத்தூரில் 234 பேர், அடையாரில் 274 பேர் திருவொற்றியூரில் 118 பேர் மாதவரத்தில் 68 பேர் பெருங்குடியில் 54 பேர், சோழிங்கநல்லூரில்  54 பேர், ஆலந்தூரில் 57 பேர், மணலியில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து பிற மாநிலங்களைச் சேர்ந்த 18  பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், வட சென்னைக்கு உட்பட்ட  5 மண்டலங்களில் இதுவரை 1,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது சென்னையின் மொத்த பாதிப்பில் 29.2 சதவீதமாகும்.  மத்திய சென்னைக்கு உட்பட்ட  5 மண்டலங்களில் இதுவரை 2,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 52.8 சதவீதமாகும். தென் சென்னைக்கு உட்பட்ட மண்டலங்களில்  இதுவரை 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 14.5 சதவீதமாகும். இதை தவிர்த்து சென்னையில் 61.90 சதவீதம் ஆண்கள், 38.06 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூதாட்டி உட்பட மூவர் பலி
புளியந்தோப்பு கன்னிகாபுரம் வெங்கடபுரம் புதிய காரணி 6வது தெருவைச் சேர்ந்த 57 வயது நபர் உடல் நலக்குறைவால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், ஓட்டேரி மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது பெண் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மேலும், ஓட்டேரி கொசப்பேட்டையை சேர்ந்த 85 வயது மூதாட்டிக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 9ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. நேற்று மதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.

மூச்சு திணறலால் இறந்த  இருவருக்கு தொற்று
கோயம்பேட்டில் 25 வயது வாலிபர் கடும் மூச்சு திணறலால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை பலியானார். ரத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது. இதேபோல், கோயம்பேட்டில் வசிக்கும் 48 வயதான பெண் மூச்சுத்திணறல் நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். ரத்த பரிசோதனையில், அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது.Tags : Corona ,Chennai ,zones ,Chennai Corona ,South Chennai , North Chennai, South Chennai, Corona, Curfew
× RELATED கொரோனா பாதிப்பு சென்னையில் 12 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டியது