×

மது விற்க மொபைல் ஆப் ஏற்படுத்த கோரி வழக்கு வக்கீலுக்கு 20 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில், டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்களுக்கு உரிய ரசீது அளிக்கப்படுவதில்லை. மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. விற்பனை தடை செய்யப்பட்ட நாட்களில் பதுக்கப்பட்டு மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையும் நடக்கிறது. மாணவ, மாணவியர் கூட மது அருந்துவதை காண முடிகிறது. இதனை தவிர்க்க கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும். மது விற்பனை செய்ய ஒரு மொபைல் ஆப் மற்றும் இணையதளம் ஆரம்பிக்க வேண்டும். மதுபான கடைகளில் ரொக்க விற்பனையை தடை செய்ய வேண்டும் என  குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாரயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, மனுதாரர் அதிமுகவை சேர்ந்தவர். அவர் அதை மறைத்துள்ளார். மேலும் டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து உத்தரவிடுமாறு மனுதாரர் கேட்க முடியாது என்று வாதிட்டார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.  இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததுடன் மனுதாரருக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.


Tags : Lawyer ,High Court , Liquor Sales, Mobile App, Fines, High Court
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...