×

மஸ்கட், சிகாகோவில் இருந்து 324 இந்தியர்கள் சென்னை வருகை

சென்னை: மஸ்கட், சிகாகோ நகரிலிருந்து இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு தனி விமானங்களில் 324 இந்தியர்கள் சென்னை வந்தனர்.ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு தனி விமானம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அதில் 183 இந்தியர்கள் இருந்தனர். இவர்களில் ஆண்கள் 106, பெண்கள் 50, குழந்தைகள் 27. அனைவரையும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு சமூகஇடைவெளியில் அவர்களை வரிசைப்படுத்தி மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடந்தன. அதன்பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவர்கள் வெளியே அழைத்துவரப்பட்டு தனி பஸ்களில் தனிமைப்படுத்தும் இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு 44 பேர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு 59 பேர், ஈக்காட்டுத்தாங்கல் தனியார் ஓட்டலுக்கு 58 பேர், சென்னை தி.நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு 22 பேர் என அழைத்து செல்லப்பட்டனர். அமெரிக்காவில் உள்ள சிகாக்கோ நகரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு தனி விமானம் நேற்று காலை 6 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அதில் மொத்தம் 141 பேர் வந்தனர். இவர்களில் ஆண்கள் 78, பெண்கள் 62, குழந்தை ஒன்று என அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

Tags : Indians ,Madras ,Chicago ,Muscat ,Chennai , Muscat, Chicago, 324 Indians, Madras
× RELATED வெளிநாடுகளில் தவித்த 487 இந்தியர்கள் மீட்பு