×

மனநலம் பாதித்தவருக்கு சாப்பாடு ஊட்டிய பெண் காவலருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிரஞ்சீவி

கொரோனா வைரஸ் கொடூரமான முறையில் பரவி வரும் இந்த நேரத்தில், காவல்துறையினர் செய்யும் பணிகளை இந்திய திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுப என்ற பெண் காவலர், ரோட்டில் உட்கார்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சாப்பாடு ஊட்டிவிடும் வீடியோ இணையதளங்களில் வைரலானது. இதை பார்த்து மனம் நெகிழ்ந்த நடிகர் சிரஞ்சீவி, சுபயிடம் செல்போன் வீடியோகால் மூலம் பேசி, அவரது செயலை பாராட்டினார். பிறகு அந்த வீடியோவை தனது டிவிட்டரில் பதிவு செய்தார். அவர்கள் பேசியது வருமாறு: ‘சில நாட்களுக்கு முன், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீங்கள் சாப்பாடு ஊட்டிவிடும் காணொலி பார்த்தேன்.

அது என் கவனத்தை ஈர்த்தது. அதை பார்த்து மனம் நெகிழ்ந்தேன். அன்று முதல் உங்களிடம் பேச வேண்டும் என்று முயற்சித்தேன். உங்களை பாராட்ட வேண்டியது என் கடமை. மனிதநேயத்தை அவரிடம் நீங்கள் வெளிப்படுத்திய விதம் மகிழ்ச்சி அளித்தது. எந்த விஷயம் உங்களை இப்படி செய்ய தூண்டியது?’’ என்று சிரஞ்சீவி கேட்டார். அதற்கு பதிலளித்த சுப, ‘இதில் விசேஷமாக எதுவும் இல்லை. நான் உணவு கொடுக்கும்போது, அவரால் அதை கையில் வாங்கி சாப்பிட முடியவில்லை. காரணம், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி’’ என்றார்.

தொடர்ந்து பேசிய சுப, ‘நீங்கள் என்னை தொடர்புகொண்டு பேசப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டதும், நான் எப்போது உங்களிடம் பேசப்போகிறேன் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உற்சாகம் அடைந்தேன். நீங்கள் எளிமையானவர் என்பதை தாண்டி, நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறீர்கள்’’ என்றார். இப்படி அவர் சொன்னதும் சிரஞ்சீவி, ‘‘உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’’ என்று சுபயை வாழ்த்தினார்.


Tags : policeman ,Chiranjeevi , Mentally ill, meals, female guard, Chiranjeevi
× RELATED ஏழுமலையான் கோயிலில் நடிகர் ராம்சரண் தரிசனம்