மாநிலங்களவையில் 39 ஆண்டுகள் எதிர்க்கட்சிகளின் கை ஓங்கிய போதிலும் சட்டம் இயற்றப்படுவது பாதிக்கவில்லை: பேஸ்புக்கில் வெங்கையா பெருமிதம்

புதுடெல்லி: ‘மாநிலங்களவையின் 68 ஆண்டு கால வரலாற்றில் 39 ஆண்டுகள் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமாக இருந்த போதிலும், முக்கிய சட்டங்களை இயற்றுவதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை,’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.மாநிலங்களவையின் முதல் அமர்வின் 68வது ஆண்டு விழாவையொட்டி மாநிலங்களவையில் தான் கடந்து வந்த பயணங்கள் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது பேஸ்புக் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். பேஸ்புக் பக்கத்தில் வெங்கையா நாயுடு கூறியிருப்பதாவது: மாநிலங்களவை, மக்களவைக்கான தேர்தல் மற்றும் பதவிக்காலம் இரண்டுமே வேறுபட்டது.

இதனால்தான், மக்களவையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை கொண்டிருப்பதும், மாநிலங்களவையில் குறைந்த உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருப்பதும் நடக்கிறது. பல ஆண்டுகளாக இது நடக்கிறது.  மாநிலங்களவையில் இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் வரை 5,472 அமர்வுகள் நடந்துள்ளது. 3,857 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், கடந்த 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஒரே நாளில் 5 திருத்த மசோதாக்களை அரசு நிறைவேற்றி இருக்கிறது.  தற்போதுள்ள பாஜ அரசுக்கும் மாநிலங்களவையில் போதுமான உறுப்பினர்கள் பலம் இல்லாத நிலையிலும், ஜிஎஸ்டி, ஐபிசி, முத்தலாக், ஜம்மு காஷ்மீரை மறுசீரமைப்பு திருத்த மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டு உள்ளன.

கடந்த 68 ஆண்டுகளில் 39 ஆண்டுகளாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக பிற கவலைகள் எழுந்தபோதிலும் சட்டங்களை உருவாக்குவது மட்டும் பாதிக்கப்படவில்லை. 1978-2014ம் ஆண்டு காலகட்டத்தில் பொது பிரச்னைகளை விவாதிப்பதில் 33.53 சதவீதத்தை அவை செலவழித்துள்ளது. 2005-2014ம் ஆண்டு காலகட்டத்தில் 41.42 சதவீதம், 2015-2019 காலக் கட்டத்தில் 46.59 சதவீதமும் செலவழித்துள்ளது. மாநிலங்களவையின் செயல்பாட்டு திறனானது 1997ம் ஆண்டு வரை 100 சதவீதமாக இருந்தது. 1998-2004 காலக் கட்டத்தில் அது 87 சதவீதமாக குறைந்தது. 2005-2014ம் ஆ்ண்டுகளில் 71 சதவீதமாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 61 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>