×

அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது இலங்கை நாடாளுமன்ற தேர்தல் குழப்பம் நீடிப்பு: ஜூன் 20ல் வாக்குப்பதிவு நடப்பதில் சிக்கல்

கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலை ஜூன் மாதத்தில் நடத்தலாமா என்பது குறித்து நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த மார்ச் 2ம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். 225 எம்பி.க்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், கொரோனா பாதிப்பால் ஏப்ரலில் நடக்க இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 20ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டுமென்ற அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டின. தேர்தலை நடத்துவதற்காக இலங்கையில் அவசர கதியில் ஊரடங்கும் தளர்த்தப்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் தேர்தல் நடத்தினால், கொரோனா பரவல் மேலும் தீவிரமடையும், எனவே தேர்தல் தேதியை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மேலும், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இவை அடுத்த வாரம் விசாரிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை தேர்தல் ஆணையம்  நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. இதில் ஆளும் எஸ்எல்பிபி கட்சி, எதிர்க்கட்சியான ஜேவிபி போன்றவை பங்கேற்றன. ஆனால், , எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஜூன் 20ம் தேதி தேர்தலை நடத்துவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

Tags : Party Meeting ,Sri Lanka ,meeting , All Party Meeting, Voting, Sri Lankan Parliamentary Election.
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...