×

பன்றி காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சார்ஸ், கொரோனா வைரஸ்: எல்லாமே சீனாவின் கைங்கர்யம்தான்: அமெரிக்கா கொந்தளிப்பு

வாஷிங்டன்: ‘கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் இருந்து 5 கொள்ளை நோய்கள் பரவி இருக்கின்றன. இனியும் உலகம் இதனை பொறுத்துக் கொள்ளாது என கூறும் நேரம் வந்து விட்டது,’ என அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறி உள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், வைரஸ் தொற்று தீவிரமடைந்தபடியே உள்ளது. சீனாவில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், சீனா இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனால், உலக நாடுகள் அனைத்தும் சீனாவுக்கு எதிராக கொதித்துப் போயுள்ளன. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் வெள்ளை மாளிகையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பல சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாதான் காரணம். அது பரிசோதனைக் கூடத்தில் இருந்து பரவியிருந்தாலும் சரி, விலங்கு இறைச்சிகளை விற்பனை செய்யும் சந்தைகளில் இருந்து பரவியிருந்தாலும் சரி, கொரேனா வைரஸ் பரவுவது நல்லதல்ல.

கடந்த 20 ஆண்டுகளில் சார்ஸ், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், கொரோனா வைரஸ் உள்ளிட்ட 5 கொள்ளை நோய்களும் சீனாவில் இருந்துதான் பரவி இருக்கின்றன. இதுபோன்ற நோய்களை சீனா தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டால் நம்மால் இன்னும் எத்தனை நாள் பொறுத்துக் கொள்ள முடியும்? இது நிறுத்தப்படவேண்டும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சீனாவில் இருந்து கிளம்பும் நோய்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறும் நேரம் வந்துவிட்டது. உலக நாடுகளிடம் இருந்து சீனா இதுபோன்ற விஷயத்தில் உதவி பெற வேண்டும். இனியும் இதுபோன்ற நோய்களை உலகம் தாங்காது. இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகிற்கே ஆபத்தாகும்.

இந்த விஷயத்தில் நாங்கள் உதவ முன்வந்த போதும் சீனா அதை ஏற்க மறுத்து விட்டது. உலக பொருளாதாரமே முடங்கி விட்டது. இது ஒருமுறை, இரண்டு முறை அல்ல 5வது முறையாக நடந்திருக்கிறது. எனவே, இதை நிறுத்த சீனாவுக்கு உதவிகள் தேவை. உலக நாடுகளிலும் உதவி பெற சீனா முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சீனா மீது பொருளாதார தடை நாடாளுமன்றத்தில் தீர்மானம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிகாரமிக்க 9 செனட் எம்பி.க்கள் கொண்ட குழு, சீனா மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்காக அதிபருக்கு அதிகாரம் வழங்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. செனடர் லின்ட்சே கிரஹாம் தலைமையிலான குழு, கோவிட்-19 பொறுப்புகூறல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது சட்டமாக்கப்பட்டால், சீனாவின் சொத்துகள் முடக்கம், பயணத் தடை, விசா ரத்து, அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் இருந்து சீனா கடன் பெறுவதை தடுத்தல், சீன வணிகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற தடைகளை அதிபர் விதிக்க முடியும்.

இது குறித்து லின்ட்சே கூறுகையில், ‘‘கொரோனா எங்கிருந்து எப்படி பரவியது என்பதை கண்டறிய வுகான் ஆய்வகத்தில் ஆய்வு நடத்த சர்வதேச சமூகத்தை அனுமதிக்க சீன அரசு தொடர்ந்து மறுக்கிறது. சீனா ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்காது. எனவே, விசாரணைக்கு ஒத்துழைக்கும் வரை, கடுமையான தடைகளை விதிக்க வேண்டும்’’ என்றார்.



Tags : China ,America ,SARS , Swine flu, bird flu, sars, coronavirus, china, USA
× RELATED சீனா குறித்த மோடியின் பதில்...