×

வாணியம்பாடியில் பரபரப்பு: பழக்கடையை சேதப்படுத்திய நகராட்சி ஆணையாளர்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

நாட்றம்பள்ளி: வாணியம்பாடியில் நகராட்சி ஆணையாளர் பழக்கடையை தூக்கி வீசி எறிந்து சேதப்படுத்தினார். இந்த காட்சி வலைதளங்களில் வைரலானதால் நேற்று நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். இதனிடையே அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நேற்று முன்தினம் சி.எல்.சாலை பகுதியில் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது தள்ளுவண்டி பழக்கடைகளை கீழே தள்ளி, பழங்களை கீழே தூக்கி வீசி சேதப்படுத்தினார். இதை பார்த்து பெண் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நேற்று அப்பகுதிக்கு சென்று தள்ளுவண்டி பழக்கடை வியாபாரிகளிடம் நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் தான்செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சேதம் அடைந்த பழங்களுக்காக உதவி தொகை வழங்கினார்.  இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மேல்விஷாரம் நகராட்சி பொறியாளர் பாபு, வாணியம்பாடி நகராட்சி நிர்வாகப் பணிகளை கூடுதலாக கவனிப்பார் என நகராட்சிகள் நிர்வாக வேலூர் மண்டல இயக்குநர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

மனித உரிமை ஆணையம் உத்தரவு: இதனிடையே பழக்கடைகளை சேதப்படுத்திய  விவகாரத்தில் ஆணையாளர் மீது மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து  வழக்குப்பதிவு செய்துள்ளது. நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களுக்குள் பதில்  அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன்  உத்தரவிட்டுள்ளார்.



Tags : area ,Vaniyambadi ,commissioner , Corona, Curfew, Vaniambadi, Habitat, Municipal Commissioner
× RELATED சென்னை மாநகர காவல் எல்லையில்...