×

மக்களின் ஒரு லட்சம் கோரிக்கை மனுவுக்கு தலைமை செயலாளர் பதில் தராமல் எங்களை கொச்சைப்படுத்தி விட்டார்

* திமுக எம்பிக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தலைமை செயலாளர் சரியான பதில் தரவில்லை. மக்களவை உறுப்பினர்களாகிய தங்களை கொச்சைபடுத்தி விட்டார் என்று திமுக எம்பிக்கள் குற்றம்சாட்டினர். திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து 15 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 14 லட்சம் மனுக்கள் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கட்சி நிர்வாகிகளால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள 1 லட்சம் மனுக்கள் தமிழக அரசு சார்பில் செய்ய வேண்டியவை. எனவே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர்.பாலு தலைமையில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஆகியோர் தலைமை செயலாளர் சண்முகத்தை நேற்று மாலை சந்தித்து 1 லட்சம்  மனுக்களை அளித்தனர்.

ஆனால், தலைமை செயலாளர் சண்முகம் திமுக எம்பிக்களுக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது: கொரோனாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுக தலைவர் மிகச்சிறப்பாக ஒரு கொள்கை முடிவை அறிவித்தார்கள். ஒன்றிணைவோம் வா திட்டத்தின்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்துக்கு வந்துள்ள 15 லட்சம் கோரிக்கை மனு மீதான பணி. அதில் 1 லட்சம் மனுக்களை தலைமை செயலாளர் சண்முகத்திடம் கொடுத்து விட்டோம். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை.

 நாங்கள் லட்சக்கணக்கான வாக்குகளில் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர்கள். தலைமை செயலாளர் எங்களை பார்த்து, என்ன சொன்னார் என்றால், இது உங்களுடைய மக்கள் பிரச்னைகள் என்று கூறுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை உதாசீனப்படுத்தி சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்.  அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை திமுக மற்றும் தோழமை இயக்கத்தை வைத்து சிறப்பாக மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். எங்களால் முடியாததை அரசு செய்ய வேண்டிய வேலை தொடர்பான மனுக்களை தான் ெகாடுத்தோம். எங்களிடம் ஆட்கள் இல்லை என்று தலைமை செயலாளர் கூறினார்.

நாங்கள் ஊழியர்கள் இல்லா விட்டாலும் பரவாயில்லை. நீங்கள் எப்போது கலெக்டருக்கு அனுப்புவீர்கள் என்று சொன்னால் போதும் என்று கேட்டேன். அவர், உங்களது மக்கள் பிரச்னை என்று மாறி, மாறி கூறுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநித எங்களை பார்த்து உங்கள் மக்கள் என்கிறார் என்றால் என்ன அர்த்தம். பணி நீட்டிப்பு எதிர்பார்த்து தலைமை செயலாளர் இப்படி செய்கிறாரோ என்று தெரியவில்லை. எங்கள் தலைவர், துணை முதல்வராக இருந்தவர். அவர் ெகாடுக்கிற பரிந்துரையை உதாசீனப்படுத்துவது தான் இந்த அரசு கொடுக்கும் மரியாதை. இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலாளரை பார்க்க வருகிறார்கள்.

தலைமை செயலாளர் அலுவலகத்தில் தொலைக்காட்சியை சத்தமாக வைத்துள்ளார். நாங்கள் வந்த பிறகாவது டிவி சத்தத்தை குறைத்து இருக்க வேண்டும். ஆனால், அவர் குறைக்கவில்லை. எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை மு.க.ஸ்டாலின் செய்கிறார். அந்த பொறாமை முதல்வருக்கு இருக்கிறதோ இல்லையோ தலைமை செயலாளருக்கு இருக்கிறது. நாங்கள் எடுத்து போன கோரிக்கைகள் எங்களுக்கான கோரிக்கைகள் இல்லை. கட்சி சார்பற்றவர்களுக்காக நாங்கள் கேட்டோம். 1 லட்சம் கோரிக்கையை நாங்கள் தன்மையாக கொடுத்தோம். எதிர்க்கட்சி தலைவர் கொடுத்த மனுக்களை உதாசீனப்படுத்தும் வகையில், உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை. எங்களுக்கு குறைவான ஆட்கள் இருக்கின்றனர் என்று கூறுகிறார்.

நாங்கள் அண்டை மாநிலத்துக்கு கேட்கவில்லை. எங்கள் வீட்டில் சாக்கடை அடைத்து இருக்கிறது என்று கேட்கவில்லை. எங்கள் வீட்டிற்கு மின்சாரம் இல்லை என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு, அவர்களது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி இங்கு அமர்ந்து வேலை செய்கின்றார்களே இவர்கள் செய்ய மறந்ததை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்கிறார். நீங்களும் செய்யுங்கள் என்று மனு கொடுத்ததை உதாசீனப்படுத்தி, அவமானப்படுத்தி அனுப்பியுள்ளார். நாங்கள் கொடுத்த மனுக்களை தீர்வு காணுங்கள் என்றால், இது உங்கள் பிரச்னை என்பதை போன்று தலைமை செயலாளர் சண்முகம் கூறிய வார்த்தையை கேட்டு அதிர்ந்து போனோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Chief Secretary , Chief Secretary, DMK, DMK MPs, Corona, Curfew
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...